search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ரசாயன கலவையுடன் நுரை பொங்க துர்நாற்றத்துடன் வெளியேறும் தண்ணீர்
    X

    கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ரசாயன கலவையுடன் நுரை பொங்க துர்நாற்றத்துடன் வெளியேறும் தண்ணீர்

    • ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர் இருப்பு 24.44 அடியாக உள்ளது.
    • நுரை பொங்கி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளான பெங்களூர் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர் இருப்பு 24.44 அடியாக உள்ளது.

    கடந்த சில மாதங்களாக கெலவரப்பள்ளி அணையில் ஷட்டர் மதகுகள் மற்றும் பராமரிப்பு காரணமாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அணையில் நீர் தேக்கி வைக்கப்படுவதில்லை. இதனால் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 1,234 கனஅடி நீர் வந்தது. இன்றும் அதேஅளவு தண்ணீர் அணைக்கு வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 1,120 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனிடையே பெங்களூர் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் மற்றும் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலப்பதால் அணைக்கு வரும் வரும் நீர், ரசாயன கலவையுடன் நுரையும் நுங்குமாக துர்நாற்றத்துடன் பொங்கி வருகிறது.

    அதேபோல அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரும், நுரை பொங்கி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×