search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சி மாணவி மரணம்- உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவு
    X

    கள்ளக்குறிச்சி மாணவி மரணம்- உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவு

    • மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர், செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மறு பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி உத்தரவு

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெரும் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலாளர் மற்றும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி, அவரது தந்தை தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மாணவியின் பிரேத பரிசோதனை தகுதியில்லாத மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது, எனவே மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி சதீஷ்குமார், தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம்? நீங்கள் இத்துறையின் நிபுணரா? என கேள்வி எழுப்பினார். அதேசமயம், இதுபோன்ற இயற்கைக்கு முரணான மரணங்கள் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவு பிறப்பித்த நிதிபதி, பிரேத பரிசோதனைக்கு பின் மனுதாரர் வேறு எந்த பிரச்சினையும் செய்யாமல் மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    'மறு பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும், சமூக வலைத்தளங்கள், மீடியா டிரையல் நடத்த அனுமதிக்கக்கூடாது. மறு பிரேத பரிசோதனையின்போது மனுதாரர் தனது வக்கீலுடன் இருக்கலாம் ' என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    Next Story
    ×