என் மலர்
தமிழ்நாடு

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி
பருவமழைக்கு முன்பே நிரம்பி வழியும் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி

- கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த உயரம் 36.61 அடி ஆகும்.
- ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு நிறைவேற்றப்பட்டு வந்தது. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி. ஆகும். கோடை காலங்களில் இந்த ஏரிகள் வற்றும்போது சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன் கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை ஏரிகளை ஒன்றிணைத்து 1,486 ஏக்கரில் புதிய ஏரி கட்டுவதற்காக ரூ.380 கோடி நிதி ஒதுக்கினார்.
இந்த நிதியை கொண்டு 2013-ம் ஆண்டு நவம்பர் 14 -ந் தேதி நீர்த்தேக்கம் கட்டும் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் முடிக்கப்பட்டு 2020-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நீர்த்தேக்கத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த உயரம் 36.61 அடி ஆகும். இந்த நீர்த்தேக்கத்தில் 500 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இதனால் இந்த ஏரியுடன் சேர்த்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் மொத்தம் 5 ஏரிகளின் கொள்ளளவு 11.505 டி.எம்.சி. ஆக உயர்ந்தது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சத்தியவேடு அருகே காடுகளில் உள்ள ஓடைகளின் நீர் மற்றும் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை கண்ணன் கோட்டை நீர்த்தேக்கத்தில் சேமித்து வைத்து தேவைப்படும்போது பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும். இந்த நிலையில் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கண்ணன் கோட்டை நீர்த்தேக்கம் முழுவதுமாக நிரம்பி வழிகிறது. உபரி நீர் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வெளியேற்றப்படுகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஏரிக்கு நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.