search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென்காசி தொகுதியில் 7-வது முறையாக தோல்வி அடைந்த கிருஷ்ணசாமி
    X

    தென்காசி தொகுதியில் 7-வது முறையாக தோல்வி அடைந்த கிருஷ்ணசாமி

    • தென்காசி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 130 வாக்குகள் உள்ளன.
    • டாக்டர் கிருஷ்ணசாமி தொடக்கத்தில் இருந்து அனைத்து சுற்றுகளிலும் 2-வது இடத்தையே பிடித்து வந்தார்.

    தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.

    அவர் இதேபோல் ஒவ்வொரு தேர்தலின் போதும் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார்.

    இந்த முறையுடன் சேர்த்து டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் தொடர்ந்து 7 முறை போட்டியிட்டார். கடந்த 1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தென்காசி தொகுதியை குறிவைத்து போட்டியிட்ட கிருஷ்ணசாமி அவை அனைத்திலும் தோல்வியையே சந்தித்தார்.

    எனவே இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று முழுவீச்சில் களப்பணியாற்றிய டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்க வில்லை.

    தென்காசி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 130 வாக்குகள் உள்ள நிலையில், இந்த தேர்தலில் 10 லட்சத்து 32 ஆயிரத்து 976 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. அதாவது 67.72 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

    நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகிக்க தொடங்கினார். அவர் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த கடைசி சுற்று வரையிலும் முதல் இடத்திலேயே நீடித்தார்.

    டாக்டர் கிருஷ்ணசாமி தொடக்கத்தில் இருந்து அனைத்து சுற்றுகளிலும் 2-வது இடத்தையே பிடித்து வந்தார்.

    முடிவில் ராணி ஸ்ரீகுமார் 4 லட்சத்து 25 ஆயிரத்து 679 வாக்குகள் பெற்றார். ஆனால் டாக்டர் கிருஷ்ணசாமி 2 லட்சத்து 29 ஆயிரத்து 480 வாக்குகள் மட்டுமே பெற்றார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது 3 லட்சத்து 55 ஆயிரத்து 870 ஓட்டுகள் பெற்ற நிலையில் இந்த முறை சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ஓட்டுகள் குறைவாகவே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×