search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மணிமுத்தாறு அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை
    X

    மணிமுத்தாறு அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை

    • தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • அடவிநயினார் அணையின் நீர்மட்டம் நேற்று 78 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 86 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    பிரதான அணையான 142 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி 17 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணையில் 5.6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தலா 2 அடி உயர்ந்து வருகிறது. நேற்று 66.65 அடியாக இருந்த நிலையில் இன்றும் 2 அடி நீர்மட்டம் உயர்ந்து 68.85 அடியாக உள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டமும் 3 அடி உயர்ந்து 84.75 அடியாக உள்ளது.

    மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டியில் 5 மில்லிமீட்டரும், அம்பை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய இடங்களில் தலா 1 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 3-வது நாளாக இன்றும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    அருவிகளில் அதிக அளவு தண்ணீர் கொட்டுவதால் குளிக்க தடைவிதிப்பதும், அனுமதிப்பதுமாக உள்ளது. இன்று காலை அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் குளித்து மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே மற்ற அருவிகளை போல பழைய குற்றாலம் அருவியிலும் 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கி கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி மற்றும் அடவிநயினார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

    அடவிநயினார் அணையின் நீர்மட்டம் நேற்று 78 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 86 அடியாக உள்ளது. ராமநதி மற்றும் கடனா அணைகளின் நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்துள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 42.65 அடியாக உள்ளது.

    அணையில் இன்று காலை நிலவரப்படி 54 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 25 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    Next Story
    ×