search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேகதாது விவகாரம்.. டிகே சிவக்குமார் கருத்துக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!
    X

    மேகதாது விவகாரம்.. டிகே சிவக்குமார் கருத்துக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!

    • கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.
    • காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியதற்கு, தமிழ் நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது..,

    "கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதை அடுத்து, 30-05-2023 அன்று நடைபெற்ற நீர்பாசனத் துறை உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்திலேயே மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும் கர்நாடக துனை முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."

    "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 177,25 டிஎம்.சி. நீரை மாதாந்திர அட்டவணை படி கர்நாடகம் அளிக்காத நிலையில், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மான்புமிகு கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்."

    "தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவேரி நதிநீர்ப் பங்கீடு என்பது 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் மெட்ராஸ் மாகாணத்திற்கும், மைசூர் மாகானாத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 262-ன்கீழ் 1956 ஆம் ஆண்டு பன்மாநில நதிநீர்த் தாவாச் சட்டத்தின்படி, பன்மாநில நதியான காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது."

    "காவேரி ஆறு பாயும் மாநிலங்களில், கர்நாடகம் மேல் நதிக்கரை மாநிலமாக விளங்குவதால், கூடுதலாக அணை கட்டுவதற்கு கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியை பெற்றே ஆகவேண்டும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மேகதாது அணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதாகும். கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் இந்தக் கூற்று தமிழகத்திற்கு வரும் காவேரி ஆற்றின் நீரைத் தடுத்து நிறுத்துவதற்கு சமம்."

    "ஏற்கெனவே காவேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீருக்குப் பதிலாக உபரி நீர் தான் கிடைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மேகதாது அணை திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டிற்கு வருகின்ற நீர் முற்றிலும் நின்றுவிடும் அபாயம் ஏற்படும். மேகதாது அணைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் 67 டி.எம்.சி. நீரை கர்நாடகம் கூடுதலாக தேக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே போதிய நீர் இல்லாததன் காரணமாக சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில் நிலத்தடி நீர் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயமும் வெகுவாகப் பாதிக்கப்படும் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகும்."

    "கர்நாடக மாநிலத்தின் இந்த நிலைப்பாடு காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிங்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். இதுபோன்ற நடவடிக்கை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வதற்கு சமம். இதன்மூலம் காவேரி ஆற்றிலிருந்து கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு வருகின்ற உபரி நீர் நின்று விடும் சூழ்நிலை ஏற்படுவதோடு, வேளாண் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு வேளாண் தொழிலே முடங்கும் அபாயம் ஏற்படும்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×