search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை- அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
    X

    சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை- அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

    • சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது.
    • சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சென்னை:

    சமூகநலம்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆய்வு செய்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் குறித்து அனைத்து புள்ளி விவரங்களும், கோரப்பட்டுள்ளன.

    28 ஆயிரம் சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது. பள்ளி, சத்துணவு மையங்களில் எண்ணிக்கை அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையினை குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் மாணவர்களின் நலனுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், அவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதற்காகவுமே காலை உணவுத் திட்டத்தை தொடங்கி உள்ளார்கள்.

    அத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்திட்டம் முதலமைச்சரின் அலுவலகத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது மட்டுமில்லாமல் "வரும் ஆண்டில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்" என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

    அப்படியிருக்க சத்துணவுத் திட்டத்துறையில் உள்ள சத்துணவு மையங்களை எப்படி அரசு மூட முயற்சி எடுக்கும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவும், சத்தான உணவை முறையாக மாணவர்களுக்கு வழங்கிடவும், தொடர் கண்காணிப்பை வலுப்படுத்திடவுமே அரசு திட்டமிட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×