என் மலர்
தமிழ்நாடு
தமிழகத்தில் 10 ஆயிரம் செவிலியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
- தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 64 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல பிரிவிற்கான புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது கர்ப்பிணி பெண்களுக்கு உதவிகள், காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.2 கோடியே 10 லட்சம் செலவில் புதிய சி.டி ஸ்கேன் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கொடைக்கானல் நகர்புற சுகாதார மையம் மேம்படுத்துவதற்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி பண்ணைக்காடு அரசு ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டி மேம்படுத்துவதற்கு 2 கோடியே 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பழனி ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக ஆக்கப்பட உள்ளது.இதற்கு ஏற்கனவே ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.69 கோடியே 96 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.124 கோடியே 98 லட்சத்து 12 ஆயிரம் ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் தொடங்குவதற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 64 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை. இவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குரங்கு அம்மை நோய் காரணமாக 22 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் கண்காணிக்கப்படுவார்கள். அவர்களது உடல்களில் சிறு தழும்புகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யப்படும்.
தமிழகத்தில் தற்போது பரவிவரும் பி.ஏ.4.மற்றும் பி.ஏ.5 வகை ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடியது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதி கண்காணிக்கப்படும். தமிழகத்தில் நோய்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. கொடைக்கானலில் விபத்து சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவர்.
வெளிநாடு குறிப்பாக உக்ரைன் நாட்டில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ மேல்படிப்புக்கு பணிக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது பணியில் உள்ள 10,000 செவிலியர்கள் படிப்படியாக காலமுறை ஊதியத்தில் இருந்து நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார், வேலுச்சாமி எம்.பி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி உள்பட பலர் உடனிருந்தனர்.