search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொன்னேரி அருகே பழமைவாய்ந்த புஷ்பதீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
    X

    பொன்னேரி அருகே பழமைவாய்ந்த புஷ்பதீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

    • ஞாயிறு கிராமத்தில் உள்ள கோவில் திருப்பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • அருமந்தை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 90 ஏக்கர் இடத்தில் முறையாக பேசி வாடகை வசூலிக்கப்படும்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சொர்ணாம்பிகை உடனுறை புஷ்பதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் இன்று காலை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கும்பாபிஷேகம் ,கோவில் குளத்தை சீரமைப்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கண்டெடுக்கப்பட்ட காளீஸ்வரர் லிங்கத்தை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.

    பின்னர் அருகில் அருமந்தை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை அவர் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஞாயிறு கிராமத்தில் உள்ள கோவில் திருப்பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி தேவைப்பட்டால் ஒதுக்கீடு செய்யப்படும். இங்குள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டித் தரப்படும். அருமந்தை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 90 ஏக்கர் இடத்தில் முறையாக பேசி வாடகை வசூலிக்கப்படும்.

    அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் தகுதி அடிப்படையில் 26 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். முறையாக பள்ளியில் பயின்று சான்றிதழ் வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைப்பு நிதி தொகை ரூ.520 கோடி உள்ளது. சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கேற்ப அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அறநிலையத்துறை ஆணையர், குமரகுருபரன், இணை ஆணையர் லட்சுமணன், பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், செயல் அலுவலர்கள் செந்தில்குமார், மாதவன் பிரகாஷ் உடன் இருந்தனர்.

    Next Story
    ×