search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பஸ்களின் இருப்பிடத்தை அறியும் இணையதளம்- அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
    X

    அரசு பஸ்களின் இருப்பிடத்தை அறியும் இணையதளம்- அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் 1.70 கோடி பேர் பயணிக்கின்றனர்.
    • இணையதளத்தை பொதுமக்கள் தேவையான தகவல்களை தேடவும் உரிய வசதிகளுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு பஸ் பயணிகளின் குறைகளை தீர்ப்பதற்கான இலவச உதவி எண் மற்றும் அரசு பஸ்களின் இருப்பிடத்தை அறியும் இணையதளம் ஆகியவற்றை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை கண்டறியவும், அவர்களின் குறைகள் மற்றும் புகார்களை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும், ஒருங்கிணைந்த பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி மையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்தார்.

    உதவி மையத்தை தொடர்பு கொள்வதற்கான இலவச எண் 1800 599 1500 அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் 1.70 கோடி பேர் பயணிக்கின்றனர். அவர்களின் கூடுதல் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கான பொது இணையதள வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் பக்கத்து மாநிலங்களுக்கு இயக்கப்படும் போக்குவரத்துக்கழக பஸ்களின் நேரம் மற்றும் அரசு போக்குவரத்துக்கழகங்கள் குறித்த தகவல்கள் ஆகிய விவரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.

    பயணிகள் தங்கள் குறைகள், புகார்கள் பயணம் தொடர்பாக தகவல்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் வசதி இந்த இணையதளத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    மாநகர போக்குவரத்துக்கழக பஸ்களின் வருகை மற்றும் இயக்க நேரம் குறித்த விவரங்கள், வழித்தட தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ள உரிய வசதி செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான 'சென்னை பேருந்து செயலியை' பதிவிறக்கம் செய்வதன் மூலம் மாநகர போக்குவரத்து கழகத்தின் பஸ் வருகை, பஸ்களின் நிகழ்நேர இருப்பிடம் மற்றும் எதிர்பார்க்கப்படும் வருகை நேரம் குறித்த விவரங்கள் பயணிகள் அறிந்து கொள்ள உரிய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இணைப்பு வசதி மூலம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உடனடி தளவழிப் பதிவு திட்டத்தின் வழியாக முன்பதிவு செய்வதற்கும், திருவிழாக்கால சிறப்பு பஸ் இயக்கம் குறித்த தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் இந்த இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இணைப்பு வசதி மூலம் தமிழ்நாடு அரசு, சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து மேம்பாட்டு நிதிக் கழகம், சென்னை மெட்ரோ ரெயில் கழகம் போன்றவற்றின் இணையதளத்தைப் பார்க்கவும் உரிய வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த இணையதளத்தை பொதுமக்கள் தேவையான தகவல்களை தேடவும் உரிய வசதிகளுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை www.arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பொதுமக்கள் பார்த்து பயன் அடையலாம்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இந்த இணையதள வசதிகளை தொடங்கி வைத்தார்.

    அப்போது போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கோபால் மற்றும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    மேற்கண்ட தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×