search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேலைநிறுத்தம் அறிவித்தாலும் முன்பதிவு பயணிகளுக்கு பாதிப்பு வராது: அமைச்சர் அறிவிப்பு
    X

    வேலைநிறுத்தம் அறிவித்தாலும் முன்பதிவு பயணிகளுக்கு பாதிப்பு வராது: அமைச்சர் அறிவிப்பு

    • விரைவு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம்.
    • நாங்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நிராகரிக்கவில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பலன்களை தர வேண்டும், வாரிசுதாரர்களுக்கு வேலை நியமனம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த மாதம் (டிசம்பர்) 19-ந்தேதி தொழிற்சங்கங்கள் நோட்டீசு வழங்கி இருந்தது.

    இதையடுத்து தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் கடந்த மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    இதில் போக்குவரத்து கழகம் சார்பில் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பின் ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் மற்றும் தொழிற்சங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் எந்த முடிவும் எட்டப்படாததால், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை பொங்கலுக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று ஒரே ஒரு கோரிக்கையை முதலில் நிறைவேற்றி தருமாறு தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினார்கள். ஆனால் அதற்கும் சரியான பதில் கிடைக்காததால் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

    இதனால் வருகிற 9-ந்தேதியில் இருந்து பஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வரும் நிலையில் ரெயிலில் டிக்கெட் கிடைக்காததால் பஸ்களில் முன்பதிவு செய்து உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' என்ற அறிவிப்பு பயணிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதைய சூழலில் பொங்கல் கழித்து பேச்சுவார்த்தை நடத்தி பரிசீலிக்கலாம் என்று சொல்லி இருந்தோம்.

    ஆனால் அதை தொழிற்சங்கத்தினர் ஏற்க மறுத்து 9-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் என்று அறிவித்து உள்ளனர். இதை சுமூக நிலைக்கு கொண்டு வர தொழிற்சங்கங்களுடன் பேசி விட்டு உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளோம். அதன்பிறகு அந்த விவரங்களை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

    கேள்வி:- தொழிற்சங்கத்தினர் ஏற்கனவே முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தெளிவுப்படுத்தி விட்டார்கள். இனிமேல் நீங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் சமரசத்துக்கு வருவார்களா?

    பதில்: அ.தி.மு.க.வை சேர்ந்த தொழிற்சங்கம் வரமாட்டார்கள். தொ.மு.ச. சேர்ந்த தொழிற்சங்கத்தினரை அழைத்து பேசிப் பார்ப்போம்.

    கேள்வி: எந்த சமரசத்துக்கும் தொழிற்சங்கத்தின் வராவிட்டால் பஸ் ஸ்டிரைக் தொடங்கி விடுமே? இதனால் பொங்கலுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுமே? ஆயிரக்கணக்கான பயணிகள் விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளார்களே?

    பதில்: விரைவு பஸ்களில் எந்த பிரச்சனையும் இருக்காது. அந்த பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். தொழிற்சங்கத்தினர் அதை ஒன்றும் செய்ய இயலாது. முன்பதிவு செய்து உள்ள பயணிகள் தாராளமாக பயணிக்க முடியும்.

    ஆனால் மற்ற போக்குவரத்து கழகங்கள் சிலவற்றில் மட்டும் தொழிற்சங்கத்தினர் பங்கெடுக்க வாய்ப்பு உண்டு. அதையும் நாம் சமாளிக்க முடியும். பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் என்ன செய்ய முடியுமோ அதை அரசு மேற்கொள்ளும்.

    நாங்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நிராகரிக்கவில்லை. பொங்கல் கழித்து பேச தயாராக இருக்கிறோம் என்றுதான் சொல்கிறோம்.

    கேள்வி: ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 8 வருடமாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கவில்லை. அதை மட்டும் முதலில் நிறைவேற்றுங்கள் என்று கூறுகிறார்களே?

    பதில்: 8 வருடம் நிலுவை என்பது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 5 வருடம் நிலுவையை வைத்துவிட்டு சென்று விட்டார்கள். அந்த முழு சுமையையும் இப்போதைய நிதி நெருக்கடியில் தாங்க முடியாது. அதுதான் பிரச்சனை.

    போக்குவரத்து துறை மட்டுமல்ல மற்ற துறைகளில் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது. இவை எல்லாம் சேரும்போது பெரிய நிதிப்பிரச்சனை வரும்.

    இவை அனைத்தையும் கணக்கெடுத்து விட்டு ஒரு பிளான் பண்ணி செய்வதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

    இந்த சூழலில் இது பொங்கல் நேரம் என்பதால் தொழிற்சங்கத்தினர் டிமாண்ட் வைக்கிறார்கள். கடந்த பேச்சுவார்த்தையின்போது அதிகபட்சமாக எல்லா கோரிக்கையும் முடித்து கொடுத்துள்ளோம்.

    சம்பள விகிதத்தை அ.தி.மு.க. ஆட்சியின்போது சீர்குலைத்து வைத்திருக்கிறார்கள். சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இன்றி குளறுபடி இருந்தது. அதை நாங்கள் சரி செய்து கொடுத்து அதனால் மாதம் 40 கோடி கூடுதல் செலவானது. இதை நிதித்துறை ஒத்துக்கொள்ளவில்லை.

    ஆனால் முதலமைச்சர் அதை கொடுத்து தான் ஆக வேண்டும் என்று சொல்லி செய்து கொடுத்தார். மற்ற கோரிக்கைகள் எல்லாம் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு திருப்திதான்.

    எந்த கோரிக்கையையும் நாங்கள் முடியாது என்று சொல்லவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலுவையை வைத்துவிட்டு சென்றதால்தான் பார்த்து செய்கிறோம் என்று கூறுகிறோம்.

    எனவே இந்த விஷயத்தில் முதலமைச்சரிடம் கேட்டு விட்டு அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி முடிவெடுப்போம்.

    இப்போதைக்கு பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள் விட இருப்பது உள்பட பல வேலைகள் இருக்கிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறந்த பிறகு அதில் உள்ள சிரமங்களை சரி செய்யும் பணிகள் நிறைய உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 7, 8-ந்தேதிகளில் வருகிறது. சட்டமன்றம் விரைவில் கூட உள்ளதாக தெரிகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் இருப்பதால் தான் பொங்கல் கழித்து பேசிக்கொள்ளலாம் என்று சொல்கிறோம்.

    இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

    Next Story
    ×