search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புயல் பாதிப்பை எதிர்கொள்ள மாமல்லபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முகாம்

    • பொது நல நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தனி கவனம் செலுத்தி பணியாற்றுகின்றனர்.
    • மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாமல்லபுரம்.

    வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' தீவிர புயல் இன்று வலுவிழந்து புயலாக மாறி வந்து கொண்டிருக்கிறது.

    இந்த புயலின் மைய பகுதி என்று அழைக்கப்படும் கண் பகுதி மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு அரசு பல்வேறு அறிவுரைகளையும், எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.

    புயல் இன்றிரவு கரையை கடக்கும் என்பதால் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாமல்லபுரம் பகுதியில் முகாமிட்டுள்ளார்.

    அவர் இன்று காலையில் நீலாங்கரை, கானாத்தூர், நெம்மேலி, கோவளம், மாமல்லபுரம் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், பருவ மழைக்கான சிறப்பு அதிகாரி முனைவர் பொ.சங்கர் ஐ.ஏ.எஸ். மற்றும் வருவாய் பேரிடர் துறை அதிகாரிகள், மீட்பு படை அதிகாரிகள் ஆகியோரும் உடன் சென்றனர்.

    மாமல்லபுரம் மற்றும் அதையொட்டிய கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் புயல் மீட்பு மையங்களையும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பார்வையிட்டார்.

    அப்போது கோவளத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் மாமல்லபுரம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கடற்கரை ஓரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளது.

    குறிப்பாக மாவட்டம் முழுவதும் 206 இடங்களில் பாதுகாப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு தங்கும் மக்களுக்காக 3 வேளை உணவு வழங்க வேண்டிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ முகாமுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.

    புயல் கரையை கடக்கும் போது மின் கம்பங்கள் சாய்ந்ததால் அதனை சரி செய்ய 600 மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. மின் வாரிய அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.

    மரம் விழுந்ததால் அதை அப்புறப்படுத்த அதற்கான ஆட்கள் மரம் அறுக்கும் கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.

    எனவே எந்த வகையிலும் எவ்வளவு பெரிய பாதிப்பு வந்தாலும் மக்களை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார்.

    அதனால் அனைத்து முக்கிய அதிகாரிகளும் இங்கு முகாமிட்டு பணியாற்றி வருகின்றனர். பொது நல நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தனி கவனம் செலுத்தி பணியாற்றுகின்றனர்.

    ஏதாவது பாதிப்பு வந்தால் மீட்பு பணிக்காக பேரிடர் மீட்பு படையினர் 120 பேர் 3 குழுவாக தயாராக உள்ளனர்.

    தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் எந்த வகையிலும் பொது மக்கள் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் பணியாற்றி வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

    அப்போது கலெக்டர் ராகுல்நாத், சிறப்பு அதிகாரி முனைவர் பொ.சங்கர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×