என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![அடுக்குமாடி குடியிருப்பில் 53 பவுன் நகை கொள்ளை அடுக்குமாடி குடியிருப்பில் 53 பவுன் நகை கொள்ளை](https://media.maalaimalar.com/h-upload/2023/12/10/1991602-gold2.webp)
அடுக்குமாடி குடியிருப்பில் 53 பவுன் நகை கொள்ளை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
- அதிர்ச்சி அடைந்த 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இது குறித்து சோமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.
சோமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கன மழையால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இந்நிலையில் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வெள்ளநீர் அதிக அளவில் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வந்த விஜயலட்சுமி இரண்டாம் மாடியில் வசித்து வந்த சரத்குமார், கார்த்திக், சரத் பாபு, அருண் ஆகிய குடும்பங்களை சேர்த்தவர்கள் தங்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு மீட்பு குழுவினர் மூலம் படகில் சென்று அப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது முதல் தளத்தில் இருந்த விஜயலட்சுமி வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதைபோல இரண்டாம் மாடியில் வசித்து வரும் சரத்குமார் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், கார்த்திக் என்பவர் வீட்டில் 5 பவுன் நகை, சரத் பாபு வீட்டில் 11 பவுன் நகை, அருண் வீட்டில் 10 பவுன் நகை என மொத்தம் 5 வீட்டில் 53 பவுன் நகைகளை பீரோவை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இது குறித்து சோமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து பீரோ மற்றும் சுவற்றில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
இது சம்பவம் குறித்து தகவல் வரதராஜபுரம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இதனைத் தொடர்ந்து முகாமில் தங்கி இருந்த மக்கள் முகாமிலிருந்து வீடுகளுக்கு படையெடுக்க தொடங்கினர்.