search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முட்டம் இரட்டை கொலை- மங்கி குல்லா புகைப்படத்தை வெளியிட்டு கொலையாளிகளை தேடும் போலீசார்
    X

    போலீசார் வெளியிட்ட மங்கி குல்லா புகைப்படம்

    முட்டம் இரட்டை கொலை- மங்கி குல்லா புகைப்படத்தை வெளியிட்டு கொலையாளிகளை தேடும் போலீசார்

    • கொலை செய்யப்பட்ட பவுலின் மேரி, திரேசம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • கொலை நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றிய மங்கி குல்லாவை முக்கிய தடயமாக போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் அருகே முட்டம் குழந்தை இயேசு தெருவைச் சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ் (வயது 54). இவரது மனைவி பவுலின் மேரி (48) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆலன் துபாயில் பணியாற்றி வருகிறார். 2-வது மகன் ஆரோன் (21) சென்னையில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். பவுலின் மேரியுடன் அவரது தாயார் திரேசம்மாள் (91) வசித்து வந்தார்.

    கடந்த 5-ந்தேதி பவுலின் மேரி, திரேசம்மாள் ஆகிய இருவரும் வீட்டில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருந்தனர். இதுகுறித்து வெள்ளிசந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட பவுலின் மேரி, திரேசம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அவர்களது உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் கொலை நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றிய மங்கி குல்லாவை முக்கிய தடயமாக போலீசார் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக தகவல் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து டி.எஸ்.பி. தங்கராமன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    வெள்ளிச்சந்தை அருகே முட்டத்தில் நடந்த கொலை வழக்கில் முக்கிய தடயம் சிக்கியது சம்பவ இடத்தில் மங்கி குல்லா ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த மங்கி குல்லா வெளிப்புறத்தில் சிவப்பு நிறமும் உள்புறத்தில் பிஸ்கட் நிறத்திலும் உள்ளது.

    வியாபாரிகள் விற்பனை பிரதிநிதிகள் பொதுமக்கள் யாராவது இதுபோன்ற குல்லாவை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்திருந்தாலோ, பொதுமக்கள் இதுபோன்ற குல்லாவை அணிந்து வந்திருந்தாலோ போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும் தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர்கள் ரகசியங்கள் காக்கப்படும் பொதுமக்கள் 9944478704 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×