search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் பங்கேற்பு
    X

    அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் ஆகியோர் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்டபோது எடுத்த படம்.

    "நடப்போம் நலம் பெறுவோம்" நடைபயிற்சி: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் பங்கேற்பு

    • உலக இருதய தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பொதுமக்கள் சத்தான பழங்கள் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடி:

    உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற நடைபயிற்சி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் முன்பாக இருந்து தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோநகர், ரோஜ்பூங்கா, படகு குழாம் ஆகிய பகுதிகளை கடந்து மீண்டும் அதே வழியில் மாதா கோவில் முன்பு வந்து நிறைவடைந்தது.

    இதில் தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், நகர போலீஸ் டி.எஸ்.பி.சத்யராஜ், மாநகராட்சி அலுவலர்கள் அதிகாரிகள் மண்டல தலைவர்கள் ராமகிருஷ்ணன், விஜயகுமார், பச்சிராஜ் உள்ளிட்ட மாநகர கவுன்சிலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அங்கு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதய மருத்துவ பிரிவு சார்பாக உலக இருதய தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி சிவக்குமார் தலைமை வகித்தார். இயக்குனர் செல்வவிநாயகம் உறைவிட மருத்துவர் சைலஸ் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் முன்னிலை வகித்தனர், பேரணியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினர்.

    அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-

    முதலமைச்சர் உத்தரவுபடி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் மக்கள் நலன்கருதி இதுபோன்று 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இங்கு இந்த கடற்கரை சாலை இருபுறமும் கடல்நீருடன் மரங்கள் அடங்கிய ரம்மியமான பகுதியாக உள்ளது. இந்த திட்டத்தை அக்டோபர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சியை மேற்கொள்கிறார்.

    இரண்டாயிரம் ஆண்டில் உலக இருதய தினம் கடைபிடிக்கப்பட்டு இன்று 23-ம் ஆண்டு நடைபெறுகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் நடைபயிற்சி தற்போது உள்ள சூழ்நிலையில் அவசியம் தற்போது குறைந்த வயதில் மாரடைப்பு ஏற்படுகிறது. நமது உணவு பழக்கவழக்கங்களிலும் அதை முறையாக கடைபிடிக்க வேண்டும். நோயற்ற வாழ்வு தான் நமக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழக கிராமப்புறங்களில் 10999 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாரடைப்பு மரணத்தை தவிர்க்கும் வகையில் முதல்கட்ட சிகிச்சையாக 14 வகையான மாத்திரைகள் வழங்கப்பட்டு பல உயிர்கள் காக்கப்படுகின்றன. இதுபோன்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த துறை முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு செயல்படுகிறது

    நான் இங்கு 8 கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டேன். ஆனால் நான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து நடந்து 13½ கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டு உள்ளேன். தினசரி இதுபோன்று நான் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

    இதனால் மூன்று வேளையும் பிடித்த உணவுகளை சாப்பிடுகிறேன். பொதுமக்கள் சத்தான பழங்கள் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். புரோட்டா, பர்கர் உள்ளிட்டவைகளை அதிகம் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும் தினசரி நடப்போம் நலம் பெறுவோம் என்று கூறினார்.

    அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மக்கள் நலன் தான் முக்கியம் என்ற அடிப்படையில் செயல்படும் முதலமைச்சரின் சிறப்பான பணிகளின் மூலம் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் வகையில் நடைபயிற்சி அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. அதே போல் இதயம் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெறுகிறது. உணவு வகைகள் கட்டுப்பாட்டுடன் சத்தான உணவுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். என்று பேசினார். பின்னர் பசுமையை வலியுறுத்தி மரக்கன்று நட்டனர்.

    Next Story
    ×