என் மலர்
தமிழ்நாடு
சென்னை-நெல்லை இடையே 'வந்தே பாரத்' ரெயில் அக்டோபரில் ஓடத்தொடங்கும்- தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பேட்டி
- புதிதாக அமைய உள்ள இந்த ரெயில் நிலையம் விமான நிலையம் போன்ற அமைப்பில் இருக்கும்.
- நெல்லை ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கப்படும்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் தென்மாவட்டங்களில் அதிக வருவாயை ஈட்டி தரும் ரெயில் நிலையமாக விளங்கி வருகிறது. இதனால் இந்த ரெயில் நிலையத்தை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்த தென்னக ரெயில்வே சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லை-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகளை பார்வையிட தனி ரெயில் மூலமாக நெல்லை வந்த தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ரெயில் நிலையத்தை பார்வையிட்டார். அதனை தரம் உயர்த்துவது குறித்த ஆலோசனைக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில் நிலையத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள இந்த ரெயில் நிலையம் விமான நிலையம் போன்ற அமைப்பில் இருக்கும். அதற்கு தேவையான இட வசதிகள் மற்றும் பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டு அரசு நிதி ஒதுக்கிய உடன் நெல்லை ரெயில் நிலையம் சீரமைக்கும் பணி சில வருடங்களுக்குள் முடிக்கப்படும்.
நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் இயக்கப்படும். நெல்லை ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கப்படும். நாகர்கோவில்-நெல்லை இரட்டை வழியில் பாதை அமைக்கும் பணி விரைவில் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையமானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1893-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. நாட்டில் உள்ள பழமையான ரெயில் நிலையங்களில் சந்திப்பு ரெயில் நிலையமும் ஒன்றாகும். இங்குள்ள 5 நடைமேடைகளில் தினமும் 48 ஜோடி ரெயில்கள் இந்த வழியாக செல்கிறது.
கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.80.60 கோடி வருவாய் இருந்த நிலையில், கடந்த ஆண்டு வருவாய் ரூ.111.7 கோடியை எட்டியது. இதனால் சந்திப்பு ரெயில் நிலையத்தின் தரம் என்.எஸ்.ஜி.-2ல் இருந்து என்.எஸ்.ஜி-3க்கு உயர்ந்துள்ளது. இதன்மூலம் இங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. நெல்லையின் அமைவிடம், தற்போதைய சூழல், ரெயில் நிலையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை, எதிர்காலத்தில் உயரும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நிலையத்தை வடிவமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான மாதிரி படம் வெளியாகி உள்ள நிலையில், சர்வதேச தரத்திலான விமான நிலையம் போல் படங்கள் காட்சியளிப்பதாக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இன்னும் 4 மாதங்களில் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு இயக்கப்படும் என்று பொதுமேலாளர் தெரிவித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த ரெயில் இயக்கப்பட்டால் சுமார் 3 மணி நேரம் வரை பயண நேரம் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.