search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவர்னர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணை
    X

    கவர்னர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணை

    • கிண்டி போலீசாருடன் என்.ஐ.ஏ. போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி விட்டதாக கூறப்படுகிறது.
    • தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே என்.ஐ.ஏ. போலீசார் விசாரணை நடத்தலாம்.

    சென்னை:

    சென்னை கிண்டி கவர்னர் மாளிகை அருகே கடந்த மாதம் 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் (வயது 42) என்ற ரவுடியை கிண்டி போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    நீட் தேர்வுக்கு எதிராக இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாக கருக்கா வினோத் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருக்கும் கருக்கா வினோத் மீது கடந்த வாரம் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரை ஒரு ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். சென்னை பா.ஜனதா தலைமை அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு கருக்கா வினோத் மீது ஏற்கனவே நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி என்.ஐ.ஏ. போலீசார் இந்த வழக்கை எடுத்து நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளதாகவும், அதன்படி இந்த வழக்கில் புதிதாக விசாரணையை தொடங்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்த தகவலை தமிழக போலீசார் குறிப்பாக சென்னை போலீசார் மறுக்கவில்லை.

    இந்த சம்பவம் நடந்தவுடன் கிண்டி போலீசாருடன் என்.ஐ.ஏ. போலீசாரும் ஏற்கனவே விசாரணை நடத்தி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக விசாரணையை தொடங்கும் பட்சத்தில் புதிதாக என்.ஐ.ஏ. போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    பொதுவாக தமிழக போலீசார் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்க, தமிழக அரசின் அனுமதி தேவை. ஆனால் முக்கியமான வழக்காக கருதினால், தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே என்.ஐ.ஏ. போலீசார் விசாரணை நடத்தலாம்.

    அந்த வகையில் இந்த வழக்கை என்.ஐ.ஏ. போலீசார் விசாரணைக்கு எடுத்திருக்கலாம் என்றும், அதுபற்றிய தகவலை மாநில அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும், ஆனால் அதுபோன்ற கடிதம் எதுவும் வரவில்லை என்றும், தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று மாலை தெரிவித்தனர்.

    ஆனால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக, கோர்ட்டில் என்.ஐ.ஏ. போலீசார் தெரிவித்து இருக்கலாம் என்றும் அந்த உயர் அதிகாரிகள் கூறினார்கள். எது எப்படி இருந்தாலும், முறைப்படி என்.ஐ.ஏ. போலீசார் எங்களுக்கு தகவல் தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சென்னை போலீசாரிடம் இருந்து கட்டாயம் பெற வேண்டும், என்றும் மேலும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

    Next Story
    ×