search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்தம்
    X

    பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்தம்

    • நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
    • தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள்.

    நெய்வேலி:

    பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். 7-வது நாளான இன்று வரை அவர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

    இரவு-பகல் பாராமல் அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். இதனால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று கடலூரில் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற் சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×