search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    student Lavanya
    X

    மாணவி லாவண்யாவை மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை - சிபிஐ தகவல்

    • லாவண்யாவை, மதம் மாறச் சொல்லி வலியுறுத்தியதால் தற்கொலை செய்துள்ளார் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
    • பள்ளி நிர்வாகி சகாயமேரி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.

    2022 தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யாவை, மதம் மாறச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தியதால் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்

    கட்டாய மதமாற்ற முயற்சியே தற்கொலைக்கு காரணம் என்பதால் பள்ளி நிர்வாகிகளை கைது செய்து பள்ளியை மூட வேண்டும் என பாஜக போராட்டம் நடத்தியது.

    மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் பள்ளி நிர்வாகி சகாயமேரி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். மாணவி லாவண்யாவின் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ திருச்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்நிலையில், இந்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக சகாயமேரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவரது மனுவில், "மாணவியின் மரணத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. மதம் மாற அவரை யாரும் வற்புறுத்தவில்லை. குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று பதிலளித்த சிபிஐ, வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 265 ஆவணங்கள், 7 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நன்கு படிக்கும் லாவண்யாவை பிற வேலைகளை செய்ய அறிவுறுத்தியதால் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்பட்டது.

    மாணவியை பிற வேலைகள் செய்யுமாறு அறிவுறுத்தியதால், அவர் தற்கொலை செய்துள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால், மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை. எனவே குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கூடாது" என தெரிவிப்பு தெரிவித்தது.

    இறந்துபோன மாணவி தரப்பு வாதத்திற்காக வழக்கை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

    Next Story
    ×