search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- 2 தரைப்பாலங்கள் மூழ்கின
    X

    ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- 2 தரைப்பாலங்கள் மூழ்கின

    • மங்களம்-ஆரணி இடையே உள்ள தரைப்பாலத்தையும் மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
    • தொடர்மழை காரணமாக பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது.

    பெரியபாளையம்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கர்னீத் மலைப்பகுதியில் ஆரணி ஆறு தொடங்குகிறது. இந்த ஆறு பிச்சாட்டூர் அணையின் முனைப்பை கடந்து தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக லட்சுமிபுரம் அணைக்கட்டை கடந்து பழவேற்காடு முகத்து வாரம் வழியாக கடலில் கலக்கின்றது.

    இந்தநிலையில் பலத்த மழை காரணமாக பெய்த மழையால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி உள்ளது. அணையில் இருந்து 460 கன அடி மழைநீர் வெளியேறி ஏ.ரெட்டிபாளையம் தடுப்பணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

    ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியபாளையம் அருகே உள்ள புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கி உள்ளது. இதேபோல் மங்களம்-ஆரணி இடையே உள்ள தரைப்பாலத்தையும் மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்மழை காரணமாக பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது. இதனால் இந்த அணைக்கட்டில் இருந்து தண்ணீர் ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கடந்த ஆண்டு பருவமழையின்போது ஆரணி ஆற்றில் பெரும்பேடு, தத்தை மஞ்சி, ஆண்டாார் மடம், ஏரெட்டிப்பாளையம், கடப்பாக்கம், பிரளயம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரை உடைந்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து தற்போது கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றி வேலன் தலைமையில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அப்பகுதியில் மணல் மூட்டைகள் சவுக்கு கம்புகள், கயிறு, அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர்மழையால் கடப்பாக்கம் ஊராட்சி ஆண்டார் மடம் பழவேற்காடு சாலையில் போடப்பட்ட தற்காலிகமாக சாலை சேதம் அடைந்தது. இதனை தாசில்தார் செல்வகுமார் பார்வையிட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    பழவேற்காடு முகத்துவாரம் வழியாக செல்லும் வெள்ள நீரில் கடல் நீர் புகுந்ததால் ஆரணி ஆற்றின் தண்ணீர் ஆண்டார் மடம் வரை உப்பாக மாறி உள்ளது. இதனால் நிலத்தடி நீர் உப்பாக மாறி விடுவதாகவும், விவசாய நிலங்களுக்கு சென்றால் பயிர்கள் கருகிவிடும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே இப்பகுதியில் ஆங்காங்கே தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×