search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் சசிகலா பங்கேற்கவில்லை- ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஏமாற்றம்
    X

    வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் சசிகலா பங்கேற்கவில்லை- ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஏமாற்றம்

    • மகன் திருமணத்தில் வைத்திலிங்கம் அரசியல் பேச மாட்டார்.
    • ஓ.பி.எஸ்., தினகரன் இருவரும் பேசுவார்கள். அது தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்றனர்.

    திருச்சி:

    தஞ்சாவூரில் நாளை (7-ந்தேதி) வைத்திலிங்கம் இல்ல திருமண விழா ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரிடம் வைத்திலிங்கம் நேரில் கொடுத்து அழைப்பு விடுத்தார்.

    இதில் சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோரை கலந்துகொள்ள செய்து புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வைத்திலிங்கம் திட்டமிட்டு இருந்தார். அதன் மூலம் தங்களது நிலைப்பாட்டை கட்சியினருக்கு எடுத்துக் காட்டவும் நினைத்திருந்தார்.

    அதன்படி நாளை நடைபெறும் திருமண விழாவில் தினகரன் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளார். அதே விழாவில் சசிகலாவையும் தான் சந்தித்து பேசுவேன் என்று ஓ.பி.எஸ். தெரிவித்து இருந்தார். ஆனால் அதுகுறித்த உறுதியான தகவலை சசிகலா தரப்பு தெரிவிக்கவில்லை.

    முன்னதாக தன்னிடம் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த வைத்திலிங்கத்திடம், உடல் நலக்குறைவு காரணமாக தன்னால் திருமண விழாவில் கலந்துகொள்ள முடியாது. மற்றொரு நாள் வீட்டுக்கு வந்து மணமக்களை வாழ்த்துகிறேன் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த திருமண விழாவில் சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்., திவாகரன் ஆகியோரை ஒரே மேடையில் ஏற்றி தங்கள் பலத்தை காண்பிக்க வைத்திலிங்கம் நினைத்திருந்த நிலையில் அது நிறைவேறாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

    ஆனாலும் ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் இருவரும் ஒருசேர மேடையேற இருப்பது இரு தரப்பினருக்கிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடல் நலம்தேறிய பின்னர் சசிகலாவும் இணைவார் என்றும் பேசப்படுகிறது.

    இதுபற்றி வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் கூறுகையில், சசிகலாவுக்கு கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால், அதற்கான சிகிச்சையில் இருக்கிறார். அதனால் அவரால் வருவதற்கான சூழல் இல்லை. மகன் திருமணத்தில் வைத்திலிங்கம் அரசியல் பேச மாட்டார். ஆனால் ஓ.பி.எஸ்., தினகரன் இருவரும் பேசுவார்கள். அது தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்றனர்.

    பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன சசிகலா-ஓ.பி.எஸ். சந்திப்புக்கு தஞ்சாவூர் திருமண விழா முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நினைத்திருந்த நிலையில் மீண்டும் ஒரு ஏமாற்றத்தை அளித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×