என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடு: இந்திய துணை தேர்தல் ஆணையர் 2-வது நாளாக ஆலோசனை
- ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
- வாக்குப்பதிவு எந்திரங்களின் தயார் நிலை குறித்தும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி பற்றி அட்டவணையை இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரம் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.
அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.
இதையொட்டி ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல், வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை, சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியவை குறித்து அந்த மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பதூ மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மைச் செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் நேற்று சென்னை வந்திருந்தனர்.
தலைமைச் செயலகத்தில் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய இவர்கள் வாக்காளர் இறுதி பட்டியல் நிலை குறித்தும், வாக்குப்பதிவு எந்திரங்களின் தயார் நிலை குறித்தும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பிறகு வருமான வரித்துறை, சுங்கத்துறை, அமலாக்கத்துறை, சி.ஆர்.பி.எப். போலீஸ் அதிகாரிகள், தமிழக ஆயுதப்படை போலீசார், தேர்தல் பிரிவு போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து இன்று மாவட்ட கலெக்டர்கள் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்கள்.
ஒவ்வொரு மாவட்ட கலெக்டரையும் தொடர்பு கொண்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்காளர் பட்டியல் பற்றியும் திருத்தம் சம்பந்தமாகவும், எவ்வளவு வாக்குப்பதிவு எந்திரங்கள் கைவசம் உள்ளது என்பது பற்றியும், இன்னும் எவ்வளவு மின்னணு எந்திரங்கள் தேவைப்படும் என்பது பற்றியும் கேட்டறிந்தனர்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வெளி மாநில போலீசார் எவ்வளவு தேவைப்படும், பதட்டமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காணொலி மூலம் விவாதித்தனர். இன்று மாலை வரை இந்த ஆய்வு நடைபெறும் என தெரிகிறது.
அதன்பிறகு துணை தேர்தல் கமிஷனர் அஜய் பதூ மற்றும் தேர்தல் கமிஷன் முதன்மை செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.






