என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
என் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு என்பது பொய்யான தகவல்- முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்
- நான் மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய மரணத்துக்குள் சாமி சிலைகள் திருட்டுப்போகாமல் பாதுகாக்க வேண்டும்.
- சேர, சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட 2 ஆயிரத்து 500 சாமி சிலைகள் நம் நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது வருத்தமாக உள்ளது.
சென்னை:
நெல்லை மாவட்டம் பழவூர் கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளைபோயின. அதில் 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டி விவசாய நிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன.
அந்த சிலைகளை மீட்ட போலீஸ் அதிகாரிகளே சர்வதேச கும்பலுடன் கூட்டுச் சேர்ந்து அவற்றை வெளிநாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பது கடந்த 2017-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர் விசாரணை நடத்தி, டி.எஸ்.பி. காதர் பாட்ஷா உள்பட அதிகாரிகளை அதிரடியாக கைது செய்தார்.
பின்னர் அவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் காதர் பாட்ஷா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பழவூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் அவருடன் சேர்ந்து தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். அவர் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொன் மாணிக்கவேல், காதர் பாட்ஷா ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். எனவே சிலை கடத்தல் தொடர்பான உண்மை வெளிவருவதற்கு இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். அதில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதிவு செய்த தகவல்கள் அப்படியே இடம்பெற்றன. இந்த நிலையில் இந்த வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி போலீஸ் வட்டாரத்தை பரபரப்பாக்கியது.
இந்நிலையில் தன் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என்று முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெளியே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
என் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், டி.எஸ்.பி. அசோக் நடராஜன் பெயரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
நான் கடந்த 2017-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி.யாக இருந்தபோது, பணியில் இருந்த 5 போலீசார் துப்பாக்கிமுனையில் சிலைகளை கொள்ளையடித்த வழக்கை பதிவு செய்தோம். இந்த வழக்கில் 47 பக்கத்தில் ஆரம்பநிலை அறிக்கையை டி.எஸ்.பி. நடராஜன் கொடுத்தார். அவர் நேர்மையான அதிகாரி. தற்போது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர். குற்றவாளிகள் பட்டியலில் எனது பெயரோ, அவரது பெயரோ தெய்வ சத்தியமாக இல்லை. அப்படி வந்த செய்தி தவறானது. ஒரு லட்சம் மடங்கு பொய்யானது.
சுபாஷ் கபூர் என்ற அமெரிக்க குற்றவாளியை நான் விட்டுவிட்டேன் என்று காதர் பாட்ஷா கோர்ட்டில் மனு அளித்திருக்கிறார். தீனதயாளன் என்பவரையும் விட்டுவிட்டேன் என்று இன்னொரு குற்றச்சாட்டையும் கூறியிருக்கிறார்.
தீனதயாளன் 1958-ம் ஆண்டில் இருந்து மும்பை வழியாக சாமி சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி வந்தார். அவரை சி.பி.ஐ., சி.பி.ஐ.டி.யோ, வெளிநாடு போலீசோ கைது செய்யவில்லை. நான்தான் அவரை கைது செய்தேன். அவரது வீட்டில் இருந்து 831 சாமி சிலைகளை மீட்டேன். அவரது வீட்டில் நான் 30 நாட்கள் விசாரணை நடத்தினேன். 90 நாட்கள் சிறையில் அடைத்தேன். நான் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும், இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தீனதயாளனை நான் விடுவித்துவிட்டேன் என்று சொல்வது நியாயமா?
பழவூரில் நடந்த சிலை கடத்தல் வழக்கில் அவரை நான் அப்ரூவராக எடுத்தேன். அப்ரூவராக எடுத்ததால் குற்றவாளியை விடுவித்துவிட்டேன் என்று சொல்கிறார்கள். சட்டமே அப்படி விட வேண்டும் என்று சொல்கிறது. சிலை கடத்தல் வழக்கில் பிச்சைமணி என்பவரை நாங்கள் அப்ரூவராக எடுத்தோம். அவர் சொன்ன சாட்சியத்தின் அடிப்படையில்தான் சுபாஷ் கபூருக்கு தற்போது 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரி அசோக் நடராஜனுக்கு அஸ்லேட்டரி பதவி உயர்வு கொடுத்திருக்க வேண்டும். அதாவது, அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்றாலும் எஸ்.பி.யாக கவுரவிக்க வேண்டும். அவர் எனக்கு தொலைபேசியிலாவது நன்றி சொல்லி இருக்கலாம். ஆனால் சொல்லவில்லை.
நான் பணியில் இருந்து ஓய்வுபெறும் வரையில் தொடர்ந்து குற்றவாளிகளை விரட்டிவந்தேன். ஓய்வுபெற்றவுடன் எங்கேயும் செல்லவில்லை. கோவிலுக்குச் சென்று உழவாரப் பணிகளை செய்துவருகிறேன். சிவனடியார்களை சந்தித்துவருகிறேன். அவர்களை தனியார் போலீஸ் போன்று மாற்றி, சாமி சிலைகளை நன்றாக கவனித்து வாருங்கள், ஏதேனும் மாற்றம் தெரிந்தால் தகவல் சொல்லுங்கள் என்று சொல்லிவருகிறேன்.
நான் மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய மரணத்துக்குள் சாமி சிலைகள் திருட்டுப்போகாமல் பாதுகாக்க வேண்டும். கோவில்களை காப்பாற்ற வேண்டும். அர்ச்சகர்களை பாதுகாக்க வேண்டும். 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகளை பதிவு செய்ய வேண்டும். இதுதான் எனது கடமை.
கோவில்களை காப்பாற்ற வேண்டும். ஏனென்றால், கோவிலே திருடப்பட்டுள்ளது. அதை அடுத்த வாரம் ஆதாரத்துடன் சொல்கிறேன். சேர, சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட 2 ஆயிரத்து 500 சாமி சிலைகள் நம் நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது வருத்தமாக உள்ளது.
சுபாஷ் கபூரை கைது செய்ததால் இந்திய-ஜெர்மன் நாட்டின் உறவில் உரசல் வந்தது உண்மைதான். அதற்கு நான்தான் காரணம். ஏனென்றால், ஜெர்மனியில் தங்கி இருந்த அவரை ஒரு வழக்குக்காக அழைத்துவந்தோம். ஆனால் அவர் மீது 4 வழக்குகளை பதிவு செய்தோம். தற்போது எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்