search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சத்துணவு திட்ட முட்டைக்கு தேசிய குழு விலை நிர்ணயம் செய்யும்- கோழி பண்ணையாளர் சங்கம்
    X

    சத்துணவு திட்ட முட்டைக்கு தேசிய குழு விலை நிர்ணயம் செய்யும்- கோழி பண்ணையாளர் சங்கம்

    • தமிழக சத்துணவு திட்டத்துக்கு, தினமும், 50 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • வெயிலின் தாக்கம் காரணமாக, 10 சதவீதம் அளவிற்கு முட்டை உற்பத்தி சரிந்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க தலைவர் சிங்கராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் முடிவில் தலைவர் சிங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    கடந்த, மே 1-ந் தேதி முதல், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.), என்ன விலை நிர்ணயம் செய்கிறதோ அந்த விலைக்கு முட்டை கொள்முதல் செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலையை என்.இ.சி.சி. நிர்ணயம் செய்வது போல், எக்ஸ்போர்ட் முட்டைக்கும் விலை நிர்ணயம் செய்கிறது.

    அதேபோல், சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதல் செய்வதற்கும், என்.இ.சி.சி. விலை நிர்ணயம் செய்ய உள்ளது. அந்த விலைக்கு மட்டுமே முட்டையை கொள்முதல் செய்ய வேண்டும் என, கோரிக்கை வைக்க உள்ளோம்.

    தமிழக சத்துணவு திட்டத்துக்கு, தினமும், 50 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு, தினசரி 50 முதல், 60 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பண்ணைகளில், முதிர்வு கோழிகள் அதிக அளவில், விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    அதனால், பள்ளிகள் திறந்ததும், முட்டை நுகர்வு அதிகரித்து, அதன் மூலம் கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக, 10 சதவீதம் அளவிற்கு முட்டை உற்பத்தி சரிந்துள்ளது. இந்தோனேசியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×