search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தடை காலம் எதிரொலி: மீன் விலை 2 மடங்கு அதிகரிப்பு
    X

    தடை காலம் எதிரொலி: மீன் விலை 2 மடங்கு அதிகரிப்பு

    • விலையை பற்றி கவலைப்படாமல் மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர்.
    • கோழி இறைச்சி விலையும் ரூ.20 அதிகரித்து உள்ளது.

    ராயபுரம்:

    தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்வதில்லை. குறைந்த தூரத்தில் மட்டும் பைபர் படகில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் காசிமேடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாகவே உள்ளது. பெரிய வகை மீன்கள் வருவதில்லை. இதனால் மீன்விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. வார இறுதி நாளான நேற்று காசிமேட்டில் மீன்விலை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம் கிலோ ரூ.1400 வரையும், வவ்வால் மீன் ரூ. 750 வரையும் விற்கப்பட்டன. இதேபோல் சிறியவகை மீன்களின் விலையும் அதிகமாக காணப்பட்டது. பெரியவகை மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வரவில்லை. எனினும் விலையை பற்றி கவலைப்படாமல் மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர்.

    கோழி இறைச்சி விலையும் ரூ.20 அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த வாரத்தில் ரூ.260 விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை உயர்ந்து இருக்கிறது.

    காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை விபரம் வருமாறு:-

    வஞ்சரம் - ரூ.1400

    சங்கரா - ரூ.400

    வவ்வால் - ரூ.750

    கொடுவா - ரூ.600

    நண்டு - ரூ.350

    காணங்கத்தை - ரூ.200

    ஷீலா - ரூ.500

    இறால் - ரூ.400.

    மீன்விலை உயர்வு குறித்து மீனவர்கள் கூறும்போது, மீன்பிடி தடைகாலம் அடுத்தமாதம் 14-ந்தேதி வரை அமலில் உள்ளது. இதனால் காசிமேட்டில் மீன்கள் வரத்து குறைந்து உள்ளது. இந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்து அதிக அளவில் மீன்கள் வரும். தற்போது மழை எச்சரிக்கையால் அங்கும் மீன்பிடிப்பது பாதிக்கப்பட்டு உள்ளதால் மீன்கள் வரத்து பாதியாக குறைந்து விட்டது. இதனால் மீன்விலை உயர்ந்து உள்ளது. மீன்பிடி தடைகாலம் முடியும் வரை விலை உயர்வு இருக்கும் என்றார்.

    Next Story
    ×