search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்- கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    சென்னிமலை டவுன் அருணகிரி நாதர் வீதியில் ஒரு வீட்டின் சுவற்றில் அமர்ந்துள்ள குரங்குகள்.

    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்- கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    • நாளுக்கு நாள் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமானதால் முழுமையாக குரங்குகளை பிடிக்க முடியவில்லை.
    • வீட்டில் உள்ள உணவு பொருட்கள், வெயிலில் காய வைத்திருக்கும் தானியங்கள் மற்றும் கடைகளில் உள்ள பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சூறையாடி வருகின்றன

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ள வனப்பகுதி சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு ஏராளமான குரங்குகள் உள்ளன.

    இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குரங்குகளுக்கு உணவுகளை கொடுத்து பழக்கியதால் உணவு கிடைக்காத சமயங்களில் இந்த குரங்குகள் சென்னிமலை நகரத்தில் உள்ள வீடுகளுக்கு வந்து அட்டகாசத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது.

    அவ்வப்போது வனத்துறையினர் கூண்டுகள் வைத்து பிடித்து வருகின்றனர். ஆனாலும் நாளுக்கு நாள் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமானதால் முழுமையாக குரங்குகளை பிடிக்க முடியவில்லை. இதனால் குரங்குகள் சென்னி மலையில் உள்ள வீடுகளுக்கு வந்து புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்கின்றன.

    வீட்டில் உள்ள உணவு பொருட்கள், வெயிலில் காய வைத்திருக்கும் தானியங்கள் மற்றும் கடைகளில் உள்ள பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சூறையாடி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட மலை அடிவார பகுதி, அருணகிரிநாதர் வீதி, பொறையங்காடு, களத்துக்காடு பகுதிக்குள் புகுந்து குரங்குகள் அட்டூழியம் செய்து வருகின்றன. அங்குள்ள ஓட்டு வீடுகளின் மேல் குரங்குகள் ஏறி ஓடுகளை பிரிப்பதும், செல்போன் கோபுரங்களில் உள்ள ஒயர்களை பிடுங்கு வதும் போன்ற செயல்களை குரங்குகள் அரங்கேற்றி வருகின்றன.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது,

    'வீட்டு வாசல்களில் தனியாக குழந்தைகள் உணவு சாப்பிடும் போது குரங்குகள் கூட்டமாக வந்து உணவுக்காக குழந்தைகளை தாக்க முயற்சி செய்கின்றன.

    அதேபோல் ஓட்டு வீடுகளின் மேல் ஏறி குதிப்பதும், ஓடுகளை பிரிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கொள்ளையர்கள் தான் வந்து விட்டார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

    அதனால் குடியிருப்பு பகுதிக்குள் அட்டூழியம் செய்யும் குரங்குகளை முழுமையாக கூண்டு வைத்து பிடித்து செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    Next Story
    ×