search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தன்னை பற்றி அவதூறாக பேசியதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்
    X

    தன்னை பற்றி அவதூறாக பேசியதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்

    • கடந்த மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி ராதிகா சரத்குமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது.
    • நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்.

    சில மாதங்களுக்கு முன்பு திமுக கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி தமிழ்நாடு ஆளுநர் மற்றும் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்தார்.

    இதையடுத்து, சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

    பின்பு தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து மீண்டும் அவர் திமுகவில் சேர்க்கப்பட்டார்.

    கடந்த மாதம் 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ராதிகா சரத்குமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பேசியதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராதிகா, சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

    அதில், "ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்" என்று பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் அவர் டேக் செய்துள்ளார்.

    இந்நிலையில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் அவரது மேலாளர் நடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், தனது குடும்பம் பற்றியும் தனது கணவர் பற்றியும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிகவும் இழிவாக பேசியதாகவும் எந்தவொரு காரணமும் இன்று பொதுவெளியில் அவதூறு செய்திகளை மக்களிடையே பரப்பி அதன்மூலம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விளம்பரம் தேடுகிறார் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அண்மையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×