search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பில்லூர் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி நீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

    பில்லூர் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி நீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    • அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 94.50 கன அடியாக உள்ளது.
    • போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் செய்ய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் தயாராக உள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மழை நீடித்தது.

    புறநகர் பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னூர், காரமடை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.

    இதனால் சாலைகளில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடியே சென்றன. பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் நகரில் உள்ள பல வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

    மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் உள்ள தியேட்டரின் அருகே உள்ள சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் வெளியேறி சாலையில் வழிந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். பல்வேறு தெருக்களிலும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 94.50 கன அடியாக உள்ளது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பவானி ஆற்றில் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 3 மாதங்களுக்கு பிறகு மின் உற்பத்தியும் தொடங்கப்பட்டுள்ளது.

    அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து எந்த நேரத்திலும் அதிகரிக்கும் என்பதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    இதனால் பவானி ஆற்று கரையோர பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், சிறுமுகை, வெண்ணல்நாயுடு வீதி, ஒடந்துறை, இந்திரா நகர், குஞ்சவண்ணான் தெரு, சீரங்க ராயன் ஓடை, வெள்ளிப்பாளையம் உள்ளிட்ட ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின் பேரில் தாசில்தார், நகராட்சி ஆணையாளர், காவல்துறையினர் ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாய்ப்புள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பெயரில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் செய்ய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் தயாராக உள்ளனர்.

    வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருமலை, பச்சமலை, சின்னக்கல்லார், நீரார்அணை, சின்கோனா, ஈடியார், பண்ணிமேடு, சேக்கல் முடி, தலானார், ரொட்டிக்கடை, உருளிகல் ஆகிய எஸ்டேட் பகுதிகளில் மிக கனமழை பெய்தது.

    இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூழாங்கல் ஆறு மற்றும் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடித்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 12 செ.மீ மழையும், வால்பாறை பி.ஏ.பியில் 11 செ.மீ, பில்லூர் அணை, சின்னக்கல்லாறில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    விமான நிலையம்-33, தமிழ்நாடு வேளாண் பல்லைக்கழகம்-29, பெரியநாய க்கன்பாளையம்-57, மேட்டுப்பாளையம்-69, பில்லூர் அணை-74, அன்னூர்-42, கோவை தெற்கு-29, சூலூர்-58, வாரப்பட்டி-29, தொண்டாமுத்துர்-70, சிறுவாணி அணை-24, சின்கோனா-67, சின்னக்கல்லார்-78, வால்பாறை பி.ஏ.பி-115, வால்பாறை தாலுகா-120.

    Next Story
    ×