search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புளியஞ்சோலை வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை
    X

    புளியஞ்சோலை வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை

    • புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
    • கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை பகுதியில் உள்ள ஆற்றில் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது.

    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டம் துறையூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது புளியஞ்சோலை சுற்றுலா தலம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை முகடுகள், அடர்ந்த மரங்கள், காடுகள், சிற்றோடைகள் என காண்போர் மனதை மயக்கும் இடங்கள் ஏராளமாக இங்குள்ளன. தற்போது அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்கும் அளவில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். இதனால் புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்குள்ள மிகப்பெரிய ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த தண்ணீர் அங்கிருந்து சிற்றோடையாக கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை பகுதியில் உள்ள ஆற்றில் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது.

    செந்நிறத்தில் ஓடும் இந்த தண்ணீரின் அழகை பார்க்க அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள். நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் கொல்லிமலை மற்றும் அடிவாரம் புளியஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் கவனமாக செயல்பட பல்வேறு முன்னேற்பாடுகள் மற்றும் எச்சரிக்கை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் அபாய எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல் பாறைகளிலும், எச்சரிக்கை, கற்கள் நிறைந்த பகுதி, பாறையின் மேல் ஏறி குதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதனிடையே திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் கடந்தவாரம் புளியஞ்சோலைக்கு சுற்றுலா வந்துள்ளார் அப்போது சிவகுமார் எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்தார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவின் பேரில் வனச்சரகர் பெருமாள் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக புளியஞ்சோலை நாட்டாமடு பகுதியில் பொக்லைன் மூலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து புளியஞ்சோலை வனப்பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×