search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அட்சய திருதியையொட்டி தங்க தட்டுவடை செட் விற்பனை- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
    X

    அட்சய திருதியையொட்டி தங்க தட்டுவடை செட் விற்பனை- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

    • 24 காரட் தங்க தட்டுவடை செட் வழங்கப்படும் என்று சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவியது.
    • கடை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற உணவு பொருளாக தட்டு வடை செட் உள்ளது. இந்த தட்டு வடை செட்டை சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் விரும்பி சாப்பிடுவதால் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் தொடங்கி இரவு 10 மணி வரை தட்டு வடை செட் விற்பனை கொடி கட்டி பறக்கிறது.

    குறிப்பாக இந்த தட்டு வடை செட் கடைகளில் , சாதா தட்டு வடை செட், முறுக்கு செட், மாங்காய் செட், பூண்டு செட், பொறி செட், நொறுக்கல், முட்டை நொறுக்கல், கார பொறி உள்பட பல்வேறு வகையான ருசி மிகுந்த செட்கள் விற்கப்படுகின்றன. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரும் வாங்கி ருசித்து சாப்பிடுகிறார்கள்.

    இந்த நிலையில் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள திரு.வி.க. சாலையில் உள்ள துருவன் தட்டுகடை செட் கடையில் அட்சய திருதியையொட்டி 24 காரட் தங்க தட்டுவடை செட் வழங்கப்படும் என்று சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. தொடர்ந்து அந்த கடையில் கடந்த சில நாட்களாக கோல்ட் பாயில் பேப்பரில் தட்டு வடை செட் வைத்து விற்பனை செய்து வந்தனர். இதனை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி ருசித்து சாப்பிட்டனர். இதனால் அந்த கடையில் கூட்டம் அலை மோதியது.

    இதனை அறிந்த அந்த பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரி பாபுராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அந்த தட்டு வடை செட் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோல்டு பாயில் பேப்பரில் உணவு தர குறியீடுகள் ஏதும் இல்லாமல் தங்க தட்டு வடை செட் என்ற பெயரில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. மேலும் அவை மனித உணவுக்கு ஏற்றதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கோல்ட் பாயில் பேப்பரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    உடனடியாக அதனை பகுப்பாய்வுக்கும் அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவின் அடிப்படையில் தட்டு வடை செட் கடை உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த கடை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×