search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மக்களுக்கு அரசு நிவாரணம் நிரந்தர தீர்வாக இருக்காது: சரத்குமார்
    X

    சென்னை மக்களுக்கு அரசு நிவாரணம் நிரந்தர தீர்வாக இருக்காது: சரத்குமார்

    • தென் மாவட்டங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கலாம்.
    • சென்னையில் நடந்த இயற்கை சீற்றம் மிகப்பெரிய அளவில் நடந்ததாக அரசு சொல்கிறது.

    நெல்லை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் பாளை கே.டி.சி. நகரில் நேற்று மாலை நடந்தது.

    இதில் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.

    தொடர்ந்து இன்று காலை நெல்லையப்பர் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு 15 நாட்களுக்கு பிறகு கூடி வரும் தேர்தலில் என்ன நிலைப்பாடு என்பதை அறிவிப்போம்.

    பா.ஜ.க.வுடன் இணைந்து பயணிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றால் இறைவன் நினைப்பது நடக்கும். மோடி நம் நாட்டின் தலைவர் என்பதை பார்க்க வேண்டும். மோடி ஒரு கட்சியைச் சார்ந்தவர் என்பதை மட்டும் நினைக்கக்கூடாது.

    தென் மாவட்டங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கலாம். நெல்லை தொகுதியில் போட்டியிடுவதாகவும் இருக்கலாம்.

    எங்களது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான். அதற்காகத்தான் சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அவர்கள் தொகுதி வாரியாக சென்று ஆய்வு மேற்கொள்வதற்கு அறிவுரை வழங்கி உள்ளேன்.

    தொகுதியில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளேன்.

    சென்னையில் நடந்த இயற்கை சீற்றம் மிகப்பெரிய அளவில் நடந்ததாக அரசு சொல்கிறது. 56 ஆண்டுகளாக இதைத்தான் நாம் சொல்கிறோம். வருமுன் காப்போம் திட்டம் என பல திட்டங்களை 2 திராவிட கட்சிகளும் வகுத்து உள்ளது. இலவசங்களை தவிர்த்து அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு பல கோடி செலவு செய்து பாதிப்பு ஏற்படாதவாறு சீர் செய்திருக்கலாம்.

    சதுப்பு நிலங்களில் 5,000 ஏக்கருக்கு மேல் பட்டா போட்டு கொடுத்து வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். சதுப்பு நிலங்கள், நீர்வழித்தடங்கள், வடிகால் உள்ளிட்டவைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த பிரச்சனையில் அரசை மட்டும் குறை சொல்லவில்லை. பொதுமக்களும் இதில் குற்றம் செய்தவர்கள்.

    ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை பொதுமக்கள் திருப்பி கொடுத்தால் தான் நீர் வழித்தடங்கள் சிறப்பாக இருக்கும். சென்னை மக்கள் அடிப்படை வசதிகள் பலதையும் இழந்துவிட்டனர்.

    அரசு நிவாரணம் மக்களுக்கு தற்காலிக உதவியாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வாக இருக்காது. வருங்கால தொலைநோக்கு திட்டத்தை அடுத்த தலைமுறைக்காக சிந்தித்து இப்போது செயல்படுத்தினால் தான் நன்றாக இருக்கும். மழை வெள்ள பாதிப்புகளை உடனடியாக அரசு செய்யவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.

    சென்னை மழை வெள்ள பாதிப்பில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்திருக்க வேண்டும். கடந்த வெள்ளத்தின் தகவல்களை வைத்து இனிமேல் வரும் காலங்களில் தவறு நடந்திருக்காமல் இருக்க நான் முதலமைச்சராக இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன்.

    சென்னை வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு செய்த திட்டத்தை மீண்டும் ஒருமுறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    2026-ம் ஆண்டு நான் தான் முதலமைச்சர் வேட்பாளர். நான் முதலமைச்சரானால் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவேன். குக்கிராமங்களிலும் கழிவுநீர் செல்வதற்கான பாதைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்.

    அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம், தொழில் வளத்தை பெருக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுப்பேன். தகுதி உள்ளவர்களையும் அறிவாளிகளையும், என்னுடன் சேர்த்துக்கொண்டு சிறந்த திட்டங்களை செயல்படுத்துவேன்.

    முதலமைச்சராக பதவியேற்று ஒரு வருட காலம் மக்களுக்கு தேவையான என்னென்ன திட்டங்களை செய்யலாம் என்பதையே ஆய்வு மேற்கொள்வேன். அதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன்.

    எதையும் மக்களுக்காக ஒரு ஆண்டுக்கு பிறகு செய்யவில்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்து சென்று விடுவேன்.

    தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளில் எது நல்ல அரசியல் கட்சி என தேர்ந்தெடுங்கள். அதுதான் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர், மாவட்ட செயலாளர் சரத் ஆனந்த், முன்னாள் மாவட்ட செயலாளர் அழகேசன், பகுதி செயலாளர் அழகேச ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக பாளை மத்திய சிறை அருகே உள்ள காது கேளாதோர் பள்ளியில் குழந்தைகளுடன் சரத்குமார் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.

    தொடர்ந்து சரத்குமாருடன் அங்குள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    Next Story
    ×