search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி- பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
    X

    வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி- பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

    • ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
    • கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

    சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்–கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.


    கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்துள்ளது.

    இன்றும் ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பர்ண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×