search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. மாநாட்டுக்கு திரளுகிறார்கள்: சென்னையில் இருந்து 1,300 பேருடன் மதுரை வந்தடைந்த சிறப்பு ரெயில்
    X

    சிறப்பு ரெயிலில் மதுரை மாநாட்டிற்காக வந்திறங்கிய அ.தி.மு.க. தொண்டர்கள்- தொண்டர்களை மாநாட்டு பந்தலுக்கு அழைத்து செல்வதற்காக கூடல்நகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன்கள்.

    அ.தி.மு.க. மாநாட்டுக்கு திரளுகிறார்கள்: சென்னையில் இருந்து 1,300 பேருடன் மதுரை வந்தடைந்த சிறப்பு ரெயில்

    • சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் வருவதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் மாநாடு நடைபெறும் வலையங்குளம் பகுதிக்கு சென்றனர்.

    மதுரை:

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. இதற்காக இந்த மாநாட்டை வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.

    அதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டு இரவு-பகலாக நடந்து வருகிறது. மாநாட்டில் தொண்டர்களை பங்கேற்க செய்வது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டன.

    அதன்படி மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் வாகனங்களை ஒழுங்கு செய்துள்ளனர். பஸ், வேன், கார்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் வருவதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா, வி.என்.ரவி, அசோக் ஆகியோர் சென்னையில் இருந்து தொண்டர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தி.நகர் சத்யா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தனியாக சிறப்பு ரெயில் ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ரெயில் குளுகுளு வசதியுடன் 3-ம் வகுப்பு படுக்கை பெட்டிகளாக விடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி பெற்று ஐ.ஆர்.டி.சி. மூலம் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு ரெயில் நேற்று இரவு 10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு இன்று காலை மதுரை கூடல்நகர் ரெயில் நிலையத்திற்கு காலை 9.10 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரெயிலில் 1,300 பேர் பயணம் செய்தனர். 14 ஏ.சி. பெட்டிகளும், ஒரே ஒரு சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியுடன் மதுரைக்கு வந்தது.

    ரெயிலில் வந்திறங்கியவர்களை மாநாட்டு பந்தலுக்கு அழைத்து செல்வதற்காக தயார் நிலையில் 40-க்கும் மேற்பட்ட வேன்கள் கூடல் நகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஏறி அ.தி.மு.க. தொண்டர்கள் மாநாடு நடைபெறும் வலையங்குளம் பகுதிக்கு சென்றனர்.

    இந்த சிறப்பு ரெயிலுக்கான முழு தொகையும் 2 மாவட்டச் செயலாளர்கள் செலுத்தியுள்ளனர். இதே போல மாநாடு முடிந்து நாளை இரவு 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் சென்னை எழும்பூர் சென்று சேருகிறது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் அணி வகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பு ரெயில் தவிர பிற ரெயில்களிலும் அ.தி.மு.க.வினர் மதுரை செல்ல ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்தவர்களும் மதுரைக்கு பல்வேறு ரெயில்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் மதுரையில் திரும்பிய திசையெல்லாம் அ.தி.மு.க. தொண்டர்கள் மயமாகவே காட்சி அளிக்கிறது.

    Next Story
    ×