search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வழிதவறி வந்து குடியிருப்பில் தஞ்சம் புகுந்தது: குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி
    X

    வழிதவறி வந்து குடியிருப்பில் தஞ்சம் புகுந்தது: குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி

    • வனத்துறை ஊழியர்கள் குட்டி யானைக்கு காய்கறி, புற்கள் உள்ளிட்ட சத்தான உணவுப்பொருட்களை வழங்கினர்.
    • கிருஷ்ணவனம் என்ற பகுதியில் வனத்துறை தற்காலிக குடில் அமைத்து உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது அட்டப்பாடி பாலூர் குடியிருப்பு. இது கோவை மாவட்டத்தை ஒட்டிய பகுதியாகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு குட்டி யானை ஒன்று அந்த பகுதிக்கு வந்தது. அந்த யானை மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதுகுறித்து கிராமத்தினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் அகளி வனச்சரக அதிகாரி சுமேஷ் தலைமையில் ஊழியர்கள், அட்டப்பாடிக்கு விரைந்து வந்து குட்டி யானையை மீட்டனர்.

    பாலக்காடு வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் தண்ணீர் தேடி குட்டிகளுடன் கிராமப் பகுதிகளுக்கு சென்று திரும்புவது வழக்கம். அப்படி வந்த கூட்டத்தில் இந்த குட்டி யானை வழிதவறி பாலுார் குடியிருப்பில் தஞ்சம் புகுந்து இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே வனத்துறை ஊழியர்கள் குட்டி யானைக்கு காய்கறி, புற்கள் உள்ளிட்ட சத்தான உணவுப்பொருட்களை வழங்கினர். இதனை ருசித்து சாப்பிட்ட குட்டி யானை அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது.

    பாலூர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த குட்டி யானையை தேடி, தாய் யானை மீண்டும் வரலாம் என்று வனத்துறை அதிகாரிகள் கருதினர். எனவே அந்த குட்டி யானை மீண்டும் அடர்ந்த காட்டுப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அது நேற்று காலை திரும்பவும் பாலூருக்கு வந்து சேர்ந்தது. இது வனத்துறை அதிகாரிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனவே குட்டி யானைக்கு மீண்டும் உணவுகள் வழங்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர் டேவிட் வினோத் தலை மையிலான டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்தனர். இதில் அந்த குட்டி யானை ஆரோக்கியத்துடன் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த குட்டி யானை அட்டப்பாடி காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிருஷ்ணவனம் என்ற பகுதியில் வனத்துறை தற்காலிக குடில் அமைத்து உள்ளது. அங்கு குட்டி யானைக்கு உணவுகள் தரப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அட்டப்பாடி வனப்பகுதியில் போதிய மழை இல்லை. எனவே அங்கு உள்ள நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. எனவே யானைகள் கூட்டமாக காட்டோரத்தில் இருக்கும் கிராமப்பகு திகளுக்கு வந்து அங்கு உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குடித்து செல்வது வழக்கம். அப்படி வந்த யானைகள் கூட்டத்தில் இருந்து தான், அந்த குட்டி யானை வழிதவறி பாலூருக்கு வந்து இருக்க வேண்டும். எனவே அட்டப்பாடி கிருஷ்ணவனம் பகுதியில் குட்டிக்கு தற்காலிக குடில் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. இது எளிதில் பிரியக்கூடியது. எனவே யானைக்கூட்டம் மீண்டும் திரும்பி வந்து குட்டியை எளிதாக மீட்டு சென்று விடும் என்று நம்புகிறோம். தாய் யானை மீட்க வரவில்லை என்றால் வனத்துறையே அந்த குட்டி யானையை வளர்க்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×