என் மலர்
தமிழ்நாடு
ஈரோடு சின்ன மார்க்கெட் வளாகத்தில் உள்ள அம்மா உணவக ஊழியர்கள் 'திடீர்' போராட்டம்
- 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர்.
- சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு அகில் மேடை வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் வளாகத்தில் அம்மா உணவகம் கடந்த 11 வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 10 சுய உதவி குழுவை சேர்ந்த பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஊழியர்கள் டோக்கன் வழங்குதல், சமையல் செய்வது, உணவு பரிமாறுதல் என தங்களுக்குள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் இந்த அம்மா உணவகத்தில் மேலும் 2 பெண் ஊழியர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தபட்டனர். அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் டோக்கன் மட்டுமே வழங்கி வந்துள்ளனர். மற்ற வேலைகளை செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மற்ற ஊழியர்கள் அவர்களிடம் நீங்களும் இங்கு மற்றவர்கள் போல அனைத்து வேலைகளை செய்ய வேண்டும். டோக்கன் போடும் வேலை மட்டும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.
ஆனால் அந்த 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை மற்ற 10 ஊழியர்கள் உணவை பரிமாறாமல் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை உணவு சாப்பிட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதார ஆய்வாளர் மணிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த 2 ஊழியர்களும் மற்றவர்கள் போல் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறினர்.
அதற்கு அதிகாரிகள் முதலில் பொதுமக்களுக்கு உணவை பரிமாறுங்கள். பின்னர் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றனர்.
இதனை ஏற்று அம்மா உணவக ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.