search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோடை விழா நிறைவு பெற்றது: 2 மாதத்தில் ஊட்டிக்கு 8 ½ லட்சம் சுற்றுலாபயணிகள் வருகை
    X

    ஊட்டியில் கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சியை முன்னிட்டு நடந்த மாணவிகளின் பரதநாட்டியம்.

    கோடை விழா நிறைவு பெற்றது: 2 மாதத்தில் ஊட்டிக்கு 8 ½ லட்சம் சுற்றுலாபயணிகள் வருகை

    • மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர்.
    • சுற்றுலாபயணிகள் வருகை மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.

    ஊட்டி:

    சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.

    அதன்படி, இந்த ஆண்டு மே 6-ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா ஆரம்பமானது. தொடர்ந்து, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் 125-வது மலர்க் கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.

    மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர். ரோஜா கண்காட்சியை 50 ஆயிரம் பேரும், பழக் கண்காட்சியை சுமார் 25 ஆயிரம் பேரும் கண்டு ரசித்துள்ளனர்.

    தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும் போது, இந்தாண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் 8 லட்சத்து 61 ஆயிரத்து 214 சுற்றுலாபயணிகள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.

    ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 752 பேரும், மே மாத்தில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 283 பேரும், மலர் கண்காட்சியின் போது 1 லட்சத்து 30 ஆயிரத்து 179 சுற்றுலாபயணிகளும் வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1 லட்சத்து 27 ஆயிரத்து 161 சுற்றுலாபயணிகள் அதிகம் வருகை தந்துள்ளனர் என்றனர்.

    இந்நிலையில், சுமார் ஒரு மாதம் நடைபெற்ற கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்வுக்கு கோட்டாட்சியர் துரைராஜ் தலைமை வகித்தார். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

    Next Story
    ×