search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    யூடியூபில் பணம் சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் பேசலாமா? சாட்டை துரைமுருகனுக்கு நீதிபதி கேள்வி
    X

    யூடியூபில் பணம் சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் பேசலாமா? சாட்டை துரைமுருகனுக்கு நீதிபதி கேள்வி

    • இவ்வாறு பேசினால் மக்கள் மத்தியில் என்ன விளைவு ஏற்படும் என மனுதாரருக்கு தெரியாதா? .
    • பேச்சு சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால் வரம்பு மீறி பயன்படுத்தக்கூடாது.

    பட்டியலின மக்களுக்கு எதிராக எஸ்.சி./எஸ்.டி. கருத்துகளை பேசியதாக திருச்சி மாவட்ட காவல்துறை வன்கொடுமை தடுப்புப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சாட்டை துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "சாட்டை முருகன் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் இதுபோன்று தொடர்ந்து அவதூறு கருத்துகளை பேசி வருகிறார்.

    இதுபோன்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி, இனிமேல் இதுபோன்ற பேசமாட்டேன் என உத்தரவாத பத்திரம் வழங்கி ஜாமின் பெற்றார். அதை மீறி தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் ஜாமின் வழங்க உத்தரவிடக்கூடாது" என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி "மனுதாரர் ஏற்கனவே தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தபோது இதுபோன்ற அவதூறு கருத்துகளை பதிவிடமாட்டேன் என உத்தரவாத பத்திரம் வழங்கப்பட்டது.

    அதன்பின் மனுதாரர் இவ்வாறு பேசி வருகிறார். அரசியல் கட்சியில் இருந்து கொண்டு இவ்வாறு பேசினால் மக்கள் மத்தியில் என்ன விளைவு ஏற்படும் என மனுதாரருக்கு தெரியாதா? பேச்சு சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால் வரம்பு மீறி பயன்படுத்தக்கூடாது. அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது என்பதை மனுதாரர் புரிந்து கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரிய வகையில் பேசி யூடியூபில் பதிவவேற்றம் செய்தால் அதற்கு பார்வையாளரும் கூடுகிறது. பணமும் குவிகிறது. யூடியூபில் பணம் சம்பாதிக்க மக்களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக பேச்சு இருக்கிறது. யூடியூபில் பணம் சம்பாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இனிமேல் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யமாட்டேன் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

    அதற்கு சாட்டை துரைமுருகன் சார்பில சம்மதம் தெரிவிக்க கீழமை நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்து ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கை முடித்து வைத்தார்.

    Next Story
    ×