search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடியரசு தினவிழா: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடி ஏற்றினார்
    X

    குடியரசு தினவிழா: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடி ஏற்றினார்

    • ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.
    • தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆர்.என். ரவி.

    குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 7.52 மணிக்கு மோட்டார் சைக்கிள் புடைசூழ வந்தார். அவர் அங்கு கூடியிருந்த பார்வையாளர்களுக்கு வணக்கம் செலுத்தியபடி வந்தார். அவரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி காரில் 7.54 மணியளவில் அவரது மனைவியுடன் வந்தார். அவரும் பார்வையாளர்கள் இருக்கும் பகுதிகளுக்கு வந்து வணக்கம் தெரிவித்தார். காலை 7.58 மணியளவில் தேசியக்கொடி ஏற்றும் இடம் அருகே கவர்னர் ஆர்.என். ரவி வந்தார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

    பின்னர் முப்படை தளபதிகள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் டி.ஜி.பி. அருண் ஆகியோரை கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து சரியாக காலை 8 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் ரோஜா மலர் தூவியபடி சென்றது.

    அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு சென்று அமர்ந்தார். கவர்னர் ஆர்.என்.ரவி அணிவகுப்பு மேடைக்கு வந்து பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பை ஏற்றார். அதனைத்தொடர்ந்து 41 வகை படைப்பிரிவுகள் அணிவகுத்து வந்தன. இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என். ரவி ஏற்றுக் கொண்டார்.

    அதன் பிறகு அவர் மேடைக்கு சென்று அமர்ந்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீரதீர துணிச்சல் மிகுந்த செயல்களுக்கான பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.

    கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கத்தை கிருஷ்ணகிரி மாவட்ட தளி பகுதியை சேர்ந்த முகமது ஜுபேருக்கு வழங்கினார். இவருக்கு ரூ.25 ஆயிரம் காசோலை, பதக்கம் மற்றும் சான்றிதழை முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கினார்.

    சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது சேலம் பூலாம்பட்டியை சேர்ந்த பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு ரொக்கப் பரிசு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    Next Story
    ×