search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் வேலூருக்கு மட்டும் வந்த சோதனை- 10, 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என வதந்தி
    X

    தமிழ்நாட்டில் வேலூருக்கு மட்டும் வந்த சோதனை- 10, 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என வதந்தி

    • 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை.
    • மக்கள் எந்தவிதமான தயக்கமின்றி 10,20 ரூபாய் நாணயத்தை ஏற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு.

    வேலூர்:

    ரூபாய் நோட்டுகள் கிழியும் நிலையில், அழுக்குகள் நிறைந்து காணப்படும். எனவே ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 10,20 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

    இந்த நாணயங்கள் முதலில் மக்கள் கைகளுக்கு புழக்கத்துக்கு வந்தபோது வியப்புடன் பார்த்தனர். மக்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி பரிவர்த்தனை செய்தனர்.

    தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 10,20 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லாது என்ற வதந்தி மக்களிடையே பரவியது.

    பொதுவாக ஒரு வதந்தி என்பது சில நாட்கள் வரை இருக்கும். ஆனால் வேலூர் மாவட்டத்தில் இந்த 10 ரூபாய் நாணய விவகாரத்தை பொறுத்தவரையில் மக்களிடையே நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.

    10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கது என்று ரிசர்வ் வங்கி பலமுறை அறிவித்துள்ளது. எனினும் வேலூர் மாவட்ட மக்களை விட்டு வதந்தி அகலவில்லை. 10 ரூபாய் நாணயங்களை செல்லாதவையாகவே மக்கள் கருதுகின்றனர். வங்கிகளில் கூட 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர்.

    வேலூரில் சுற்றுலா பயணிகள் மற்றும் சிகிச்சைக்காக தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் வருகின்றனர்.

    இங்குள்ள 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் சுமார் 15,000 வட மாநிலத்தவர்கள் தங்கி உள்ளனர். வட மாநிலத்தவர்கள் வருகை வேலூர் நகரை வர்த்தக மையமாக மாற்றி உள்ளது. வேலூருக்கு வருகை தரும் வெளியூர் மக்கள் 10-20 ரூபாய் நாணயத்தை கையில் வைத்து கொண்டு அலைகின்றனர்.

    சிறு வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பெரும்பாலான இடங்களில் 10,20 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. இதனால் அவதியடைகின்றனர்.

    பஸ்களில் கூட இந்த நிலை தான் நீடிக்கிறது. சில்லரையாக கொடுங்கள் என்று கண்டக்டர்கள் கூறுவார்கள். ஆனால் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் அதை வாங்குவதில்லை.

    ரூபாய் நோட்டாக வழங்குங்கள் என்கின்றனர். இதனால் வெளியூர் பயணிகளுக்கும், பஸ் கண்டக்டர்களுக்கும் இடையே தகராறும் ஏற்பட்டுள்ளது.

    பிச்சை எடுப்பவர்கள் கூட இந்த நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். எனவே 10 ரூபாய் நாணயங்களை கோவில் உண்டியலில் போட்டுச் செல்கின்றனர்.

    கடைக்கு வரும் மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. அவர்கள் வாங்க தொடங்கினால் நாங்களும் வாங்கி விடுவோம் என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    ஆனால் பொதுமக்கள் தரப்பில் வியாபாரிகள் வாங்கவில்லை அவர்கள் வாங்கினால் நாங்களும் வாங்க தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவிக்கின்றனர்.

    ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர்

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் தொடர்பான பிரச்சினையில் வியாபாரிகளும், பொதுமக்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர்.

    இதற்கு தீர்வாக மாவட்ட நிர்வாகம் தான் களமிறங்கி அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    வேலூர் மாவட்டத்தில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியால் சில வியாபாரிகள், வாங்க மறுப்பதாக தெரியவருகிறது. இது வெறும் வதந்தி, 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும், அனைத்து வங்கிகளிலும் அரசாங்க அலுவலகம் 10,20 ரூபாய் நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே விளக்கமளித்துள்ளது, எனவே 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மக்கள் எந்தவிதமான தயக்கமின்றி 10,20 ரூபாய் நாணயத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×