search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடமாநிலங்களில் ரயான் துணி விற்பனை இல்லாததால் ஈரோட்டில் 40 சதவீத விசைத்தறிகளின் உற்பத்தி நிறுத்தம்
    X

    வடமாநிலங்களில் ரயான் துணி விற்பனை இல்லாததால் ஈரோட்டில் 40 சதவீத விசைத்தறிகளின் உற்பத்தி நிறுத்தம்

    • உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகள் வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
    • ஓபன் என்ட் மில்களில் காட்டன் நூல் வாங்கி தறிகளை இயக்கி வந்தனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் வீரப்பன் சத்திரம், லக்காபுரம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 20 ஆயிரம் தறிகளில் ரயான் துணிகளும், 10 ஆயிரம் தறிகளில் பருத்தி நூல் துணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகள் வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    கடந்த 6 மாதங்களாக ரயான் துணிகளுக்கான தேவை குறைந்ததாலும், மழையின் காரணமாகவும் ஈரோட்டில் உற்பத்தியாகும் ரயான் துணிகள் தேக்கமடைந்தன. இதனால் பலரும் ஓபன் என்ட் மில்களில் காட்டன் நூல் வாங்கி தறிகளை இயக்கி வந்தனர்.

    இந்நிலையில் ஓபன் என்ட் மில்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கழிவு பஞ்சில் இருந்து உற்பத்தியாகும் நூல்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் தறிகளில் 10 ஆயிரம் தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எஞ்சிய தறிகள் பகுதி நேரம் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் 40 சதவீதம் அளவிற்கு தொழில் முடங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை தமிழ்நாடு முழுவதும் நிலவுவதால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

    விசைத்தறி தொழில் முடங்கியதால் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். வாரத்திற்கு பாதி நாட்கள் கூட வேலை கிடைப்பதில்லை என்றும், வாரத்திற்கு 2,500 ரூபாய் ஊதியம் பெற்று வந்த தங்களுக்கு அது ஆயிரம் ரூபாய் பெறுவதே சிரமமாக இருப்பதாகவும், கூலி தொகை பாதியாக குறைந்ததால் குடும்பத்தை நடத்த முடியாத சூழலில் தவிப்பதாகவும் தெரிவித்தனர்.

    இலவச வேட்டி சேலைக்காக இ-டெண்டர் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், இலவச, வேட்டி சேலை உற்பத்திக்கான நூல்களை தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும் என ஈரோடு விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ரயான் மற்றும் காட்டன் நூல் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கு, இலவச வேட்டி- சேலை ஆர்டர்கள் கை கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    Next Story
    ×