search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆறுமுகநேரியில் விஷம் வைக்கப்பட்ட உணவை தின்றதால் 5 மாடுகள் பலி
    X

    ஆறுமுகநேரியில் விஷம் வைக்கப்பட்ட உணவை தின்றதால் 5 மாடுகள் பலி

    • விஷம் வைக்கப்பட்ட வாழைப்பழங்களை தின்று விட்டு மாடுகள் இறந்து போகும் சம்பவங்கள் இப்பகுதியில் தொடர்வதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
    • மாடுகளின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை மேய்ச்சலுக்காக காலையில் அவிழ்த்து விடுவதும் அவை மீண்டும் மாலையில் வீடு திரும்புவதும் வழக்கம்.

    இந்த மாடுகள் ஆறுமுகநேரியின் மேற்கே அமைந்துள்ள குளக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள வயல்காடு அருகே மேய்ச்சல் இடங்களுக்கு சென்று வரும். இதன்படி நேற்று காலையில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில் பல இரவு ஆன பிறகும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவற்றின் உரிமையாளர்கள் தேடிச் சென்றனர். அப்போது மூலக்கரைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே சில மாடுகள் இறந்து கிடந்ததையும், மேலும் சில மாடுகள் உயிருக்கு போராடிய நிலையிலும் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக ஆறுமுகநேரி அரசு கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 மாடுகளுக்கு அவசர சிகிச்சைகளை மேற்கொண்டார். இறந்து போன மாடுகளையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் தான் இந்த மாடுகள் இறந்திருக்கின்றன. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு தான் முழுமையான விவரம் தெரியவரும் என்றார்.

    விஷம் வைக்கப்பட்ட வாழைப்பழங்களை தின்று விட்டு மாடுகள் இறந்து போகும் சம்பவங்கள் இப்பகுதியில் தொடர்வதாக பொது மக்கள் கூறுகின்றனர்.

    பாதிக்கப்பட்ட மாடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. சம்பவம் குறித்து மாடுகளின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×