search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பை ஏற்படுத்திய சமூக ஆர்வலர் கொலையில் வக்கீல் உள்பட 9 பேர் கைது
    X

    திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பை ஏற்படுத்திய சமூக ஆர்வலர் கொலையில் வக்கீல் உள்பட 9 பேர் கைது

    • சமூக ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டப்பட்ட சம்பவம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலையாளிகள் வேறு எங்கும் தப்பி சென்றுவிடாத வகையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ருத்ரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன்.37 வயது வாலிபரான இவர் நேற்று மதியம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த மேட்டுமங்களம் பகுதியில் ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தார்.

    சமூக ஆர்வலரான இவர் சென்னை செல்வதற்காக ஓட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறி அமர்ந்தார். அப்போது அவரது காரை 10 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. அவர்கள் திடீரென கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த சர்புதீன் காரில் இருந்து இறங்கி தப்ப முயன்றார். ஆனால் அதற்குள் மர்ம கும்பல் அவரை காருக்குள் வைத்தே சரமாரியாக வெட்டியது. இதில் சர்புதீனின் உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் அவரால் தப்பமுடியவில்லை. சம்பவ இடத்திலேயே சர்புதீன் துடிதுடித்து பலியானார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு திருக்கழுக்குன்றம் போலீசார் விரைந்து சென்றனர்.மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் தலைமையில் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். சமூக ஆர்வலர் சர்புதீன் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சர்புதீன் வழக்கு போட்டதும் அதன் காரணமாக திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் மற்றும் மோதல் இருந்து வந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில் ஆக்கிரமிப்புகள் விவகாரம் தொடர்பாக இருந்து வந்த மோதல் காரணமாகவே சர்புதீன் திட்டம் போட்டு தீர்த்துக்கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சர்புதீனை வெட்டிக்கொன்றதாக 9 பேரை அதிரடியாக கைது செய்தனர். கொலை நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    ரகுமான், மன்சூர், இப்ராகிம், அஜிஸ், நஸிம், ரகுமான், வெள்ளை,சலீம், பரூக். இவர்கள் அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 9 பேரில் சலீம் வக்கீல் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கொலையாளிகள் வேறு எங்கும் தப்பி சென்றுவிடாத வகையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட சர்புதீனுக்கு திருமணமாகி மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.அவர்கள் சர்புதீன் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பரிதாபத்தை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டப்பட்ட சம்பவம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில் கேமரா காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×