search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீண்டகாலமாக சொத்துவரி கட்டாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை
    X

    நீண்டகாலமாக சொத்துவரி கட்டாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

    • சொத்து உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    • 30-ந்தேதிக்கு பிறகு செலுத்தினால் 1 சதவீதம் அபராதம் கட்ட வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனம் சொத்துவரியாகும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது.

    வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள், கடைகள் மூலம் ஆண்டுக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு சொத்துவரி உயர்த்தப்பட்ட பிறகு நடப்பு ஆண்டின் சொத்துவரி இலக்கு ரூ.1,600 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    முதல் அரையாண்டிற்கான சொத்துவரி செலுத்த வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். அந்த வகையில் இதுவரையில் ரூ.605 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரூ.200 கோடியை வசூலிக்க வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    சொத்து உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 30-ந் தேதிக்கு பிறகு செலுத்தினால் 1 சதவீதம் அபராதம் கட்ட வேண்டும். அதனால் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை உடனே செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    அதே வேளையில் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் சொத்து உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயப் போகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி முதல் இதற்கான சட்ட விதி அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பல ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாமல் 'டிமிக்கி' கொடுத்து வரும் வணிக நிறுவனங்கள், சொத்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

    இதுகுறித்து வருவாய் அதிகாரிகள் கூறியதாவது:-

    நீண்டகாலமாக சொத்துவரி செலுத்தாமல் 100 பேர் இருக்கிறார்கள். அவர்கள் ரூ.120 கோடி சொத்து வரி செலுத்த வேண்டும். அவர்களுக்கு பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டது. உரிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சொத்துவரி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். நீண்ட காலமாக சொத்துவரி கட்டாமல் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வரும் இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதிய சட்ட விதிகளின்படி அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு அதன் மூலம் சொத்துவரியை பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    எனவே 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தாவிட்டால் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடரும். இது முதல்முறையாக செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×