search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களோடு நான் கைகோர்ப்பேன்- திருமாவளவன்
    X

    பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களோடு நான் கைகோர்ப்பேன்- திருமாவளவன்

    • கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • முழு மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.

    திருச்சி:

    பெரம்பலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற இரு அவைகளுக்கும் குடியரசு தலைவர் தான் தலைவராக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டமே அதை தான் உறுதிப்படுத்துகிறது. புதிதாக பாராளுமன்ற கட்டிடம் கட்டியுள்ள நிலையில் அதன் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.

    திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசு தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. ஜனநாயக மரபை சிதைக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவின் போது அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது குடியரசு தலைவரும் அழைக்கப்படவில்லை. இது திட்டமிட்டு செய்த நடவடிக்கை தான். அதுமட்டுமில்லாமல் மே 28-ந்தேதி என்பது சாவர்க்கரின் பிறந்த நாளாக உள்ளது. சனாதன தர்மத்தை நிலைநாட்ட பெரிதும் பாடுபட்டவர் சாவர்க்கர். அவர் பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களுக்காக நாங்கள் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளோம்.

    இந்த விழாவிற்கு குடியரசு தலைவரும் அழைக்கப்பட வேண்டும், திறப்பு விழா தேதியும் மாற்றப்பட வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவுகள் அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும். மோடி அரசுக்கு கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பு அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான தீர்ப்பு. கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சினை, முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு ரத்து போன்றவற்றை செய்து மக்களை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அதன் காரணமாக இந்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு அளித்து இந்துக்கள் தான் பா.ஜ.க.வை தோல்வி அடைய செய்தார்கள். 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இது பிரதிபலிக்கும்.

    கர்நாடக அமைச்சரவை பொறுப்பேற்பு விழாவில் எங்களுக்கு அவமரியாதை நடக்கவில்லை. முறைப்படி தான் எங்களுக்கு நாற்காலிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். முழு மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.

    கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்திருப்பது முதலமைச்சர் அதை மனிதாபிமான அடிப்படையில் அணுகி இருக்கிறார் என்பதை தான் காட்டுகிறது. கள்ளசாராயத்தை ஊக்குவிக்கிறது என விமர்சிக்க கூடாது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களோடு நான் கைக்கோர்ப்பேன். பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமையக்கூடாது, அது நாட்டுக்கு நல்லதல்ல, அது அமைந்தால் சனாதன வாதிகளுக்கு தான் வலு சேர்க்கும். ஜாதி பெயரில் பட்டங்கள் வழங்குவது விளம்பரத்திற்காக செய்யும் வேலை, தேவையில்லாத வேலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×