search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சினிமா வாய்ப்புக்கு ஏங்கும் திருநங்கைகள்: 'வாய்ப்பு கிடைத்தால் கலக்குவோம்' என்கிறார்கள்

    • கடவுள் விட்டவழி என்று தாய் கொடுத்த ரூ.1000 பணத்துடன் சென்னைக்கு புறப்பட்டார்.
    • ‘மனம்’ என்ற குறும்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து மேலும் சில குறும்படங்கள் கிடைத்தது.

    குடும்பத்தின் அவமான சின்னமாக வெறுக்கப்பட்ட ஒரு திருநங்கை சினிமாவில் அழகு சின்னமாக உருவெடுத்துள்ளார். ஆம், இந்தியாவிலேயே முதல்முறையாக சினிமாத்துறையில் கேரள அரசின் விருதை பெற்றவர் நேகா.

    'அந்தரம்' என்ற படத்தில் கதாநாயகியாகவே கலக்கி வருகிறார். இப்போது தமிழில் நடிகை திரிஷாவுடன் 'தி ரோடு' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் வெள்ளித்திரையில் மின்னப்போகிறது.

    நேகாவைபோல் பல திருநங்கைகளுக்கும், திருநம்பிகளுக்கும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவும், ஆசையும் இருக்கிறது.

    இரண்டு பாலினத்தவர்களே கலைத்துறையில் கால் பதிக்கவும், சாதிக்கவும் போராடும்போது 3-ம் பாலினத்தவர்களும் வாய்ப்பு பெறுவது சாதாரண விஷயமா?

    அதற்கான ஒரு முயற்சியை மேற்கொண்டு வருகிறார் நேகா. அவருடன் திருநம்பி ரிஸ்வான் என்பவரும் இணைந்து 'க்யூர் காஸ்டிங்' என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார்கள்.

    இந்த அமைப்பின் மூலம் கலைத்துறையில் நுழைய விரும்பும் 3-ம் பாலினத்தவர்களுக்கான 3 நாள் பயிற்சி பட்டறை சென்னை சாலிகிராமத்தில் நடத்தப்பட்டது. கோவை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த 20 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு நேகா, டைரக்டர் சசிகுமார், மிஸ்கின் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். அவர்களில் 6 பேரை ஆடிசன் வைத்து தேர்வு செய்யப்போவதாக மிஸ்கின் உறுதியளித்துள்ளார்.

    பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர்கள்.

    மேலும் கானா பாடகியான திருநங்கை விமலா, ஆடை வடிவமைப்பாளர் ஆகியோரையும் சினிமாத்துறையில் சேர்க்க முன்வந்துள்ளார்கள்.

    தங்கள் ஏக்கத்தையும், தவிப்பையும் உணர்ந்து கலைத்துறையில் எங்களுக்கும் வாய்ப்பளித்தால் நாங்களும் கலக்குவோம்ல... என்கிறார்கள்.

    இவர்களுக்கு பக்க பலமாகவும், ஊக்கமருந்தாகவும் விளங்குபவர் திருநங்கை நடிகையான நேகா தான்.

    திருநங்கைகளில் புகழின் உச்சத்தை தொட்டாலும் நேகா இந்த இடத்தை பிடிப்பதற்காக நடத்திய போராட்டங்களும், தாங்கிய வலிகளும் ஏராளம்.

    யார் இந்த நேகா...?

    அவரே கூறுகிறார்....

    திருவாரூரில் மிகவும் சாதாரணமான விவசாய குடும்பம். நெற்களஞ்சிய பகுதியில் வாழ்ந்தாலும் ரேசன் அரிசிதான் அந்த குடும்பத்துக்கு கைகொடுத்தது.

    4 மகள்கள், 5-வதாக பிறந்த மகன்தான் (?!) நேகா. ஒரு ஆண் பிள்ளை இல்லை என்ற ஏக்கத்தை தீர்க்க வந்து பிறந்தான் என்று மொத்த குடும்பமும் மகிழ்ந்தது. 4 சகோதரிகளும் தங்கள் சகோதரனை வாரி அனைத்து மகிழ்ந்தார்கள்.

    தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி என்று பள்ளி படிப்பு தொடர்ந்தது. வடவாரிமங்கலம் சோம சுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வை தொடர்ந்தார். அதேநேரம் இனி நீ ஆணாக உன் வாழ்க்கையை தொடர முடியாது என்று உள்ளுணர்வு உறுத்தியது.

    இந்த விஷயத்தை வீட்டில் வெளிப்படுத்தியதும் சராசரி மனிதர்களின் சுய ரூபத்தை அவர்களும் வெளிப்படுத்த தொடங்கினார்கள். கல்லூரியில் பி.டெக் படிப்பில் சேர்ந்த சில மாதங்களிலேயே இனிமேல் சக ஆண்களுடன் இணைந்து படிப்பது சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டது.

    வீட்டிலும் வாழ முடியவில்லை. வெளியிலும் நடமாட முடியவில்லை. கடவுள் விட்டவழி என்று தாய் கொடுத்த ரூ.1000 பணத்துடன் சென்னைக்கு புறப்பட்டார்.

    சென்னையில் வந்து என்ன செய்வது? எப்படி பிழைப்பது? எதுவும் புரியாத நிலையில் சக திருநங்கைகளுடன் சேர்ந்து கடை, கடையாக சென்று வசூலிப்பது, சுங்கசாவடிகளில் நின்று கையேந்துவது என்று எல்லா வேலைகளை செய்தும் சாப்பாட்டுக்கும், மருத்துவ செலவுக்கும்கூட போதவில்லை. சாவு வீட்டில் ஒருநாள் முழுவதும் ஆடினால் ரூ.1000 கொடுப்பார்கள். அதையும் ஆடிவிட்டார். நிரந்தர வேலை எதுவும் இல்லை. எழுத்து, பேச்சு, தொகுப்பாளினி என்று பல தளங்களில் கால் பதித்தும் பாலின வேறுபாடு நிரந்தரமாக நிற்கவிடாமல் துரத்தியது.

    அந்த நேரத்தில் 'மனம்' என்ற குறும்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து மேலும் சில குறும்படங்கள் கிடைத்தது.

    இதில் நடித்ததன் மூலம் மலையாள படமான அந்தரத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததற்காக கேரள அரசின் உயரிய விருது கிடைத்தது. முதல்-மந்திரி பினராயி விஜயன் அந்த விருதை வழங்கியபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    இப்போது தமிழில் திரிஷா மேடத்துடன் 'தி ரோடு' படத்தில் நடித்ததும் அவர் அருகில் நான் நிற்கும் படம் விளம்பரங்களில் இடம்பெற்று இருப்பதும் பெருமையாக உள்ளது. இந்த இடத்தை பிடிக்கவே நான் பத்து ஆண்டுகளுக்கும் மேல் போராட வேண்டியிருந்தது.

    என்னைப்போல் எத்தனையோ திருநங்கைகளும், திருநம்பிகளும் மற்ற துறைகளை போல் கலைத்துறையில் ஈடுபட ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவவே இந்த அமைப்பை உருவாக்கி உள்ளோம் என்றார்.

    சாவுக்குகூட அனுமதிக்காத சமூகம்

    எவ்வளவு உயர்ந்த இடத்தை பிடித்தாலும் சமூகத்தில் சரியான அந்தஸ்து இல்லையே என்று நேகா வேதனையோடு கூறினார். 18 வயதில் ஊரைவிட்டு கிளம்பிய நான் பெற்றோர்கள், சகோதரிகள் பேசவாவது செய்வார்கள் என்ற ஆசையோடு சென்றபோது அடித்து துரத்தினார்கள். நான் படித்த பள்ளியை சென்று பார்த்தேன். தியாகராஜசுவாமி கோவிலில் சென்று சாமி கும்பிட்டேன். என் தப்பு எதுவுமில்லையே இறைவா என்று கண்ணீர்விட்டு அழுதேன்.

    3 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் என் தந்தை இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. அடித்து விரட்டினாலும் பெற்ற தந்தையாச்சே என்று இறுதி மரியாதை செலுத்த ஆசைப்பட்டேன். அதற்கும் அனுமதிக்கவில்லை. இதுதான் உலகம் என்று எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டேன் என்றார் நேகா. ஆழித்தேர் மட்டுமல்ல இந்த அழகு திருநங்கையும் திருவாரூரில் பிறந்து திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

    Next Story
    ×