search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    7 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் ரூ.20 வரை கட்டணம் உயர்வு
    X

    7 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் ரூ.20 வரை கட்டணம் உயர்வு

    • வாகன ஓட்டிகள் கூடுதல் சுங்ககட்டணம் செலுத்தி செல்ல வேண்டும்.
    • ஆத்தூர் சுங்கச்சாவடியிலும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    மதுராந்தகம்:

    தமிழகத்தில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணங்கள் மாற்றி அமைப்பது வழக்கம்.

    இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலில் ஏப்ரல்-1ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இமைக்க ரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சவாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

    இதில் ஒரு முறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் 20 வரையிலும், மாதாந்திர கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியிலும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதில் பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழிப்பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்துக்கு ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், ஒரு மாதத்தில் 50 ஒரு வழிப்பயணத்துக்கு மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.45 முதல் ரூ.200 வரை உயர்த்தப்பட்டது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை அதிகரிக்கப்பட்டது. ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழிப்பயணத்தில் ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாதாந்திர கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரையும், தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் ரூ.10 வரையும் உயர்த்தப்பட்டது.

    பரனூர், ஆத்தூர் உள்ளிட்ட மொத்த 7 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.

    எனவே நாளை முதல் வாகன ஓட்டிகள் கூடுதல் சுங்ககட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதம் முதல் கட்டணம் உயர்வு இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×