என் மலர்
தமிழ்நாடு
வங்கி கணக்கில் செலுத்துவதில் குழப்பம்- பெண்களுக்கு வீடு தேடி வரும் ரூ.1000 உரிமைத்தொகை
- கடந்த 14-ந் தேதி முதலே பலருக்கும் வங்கி கணக்கில் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டது.
- மகளிர் உரிமை தொகை கிடைக்காத ஏமாற்றத்தில் இருந்த பெண்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
மதுரை:
கடந்த 2021-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு உடனடியாக பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக வெளியிட்டார். அதைத் தொடர்ந்து மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் எப்போது அமலுக்கு வரும் என ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதற்காக சுமார் 1.5 கோடி பெண்கள் விண்ணப் பம் செய்திருந்தனர். இதில் 50 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சுமார் 1 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம் ரூ.1000 கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 14-ந் தேதி முதலே பலருக்கும் வங்கி கணக்கில் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை வங்கி கணக்கில் கிடைக்காத பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் தொடர்ச்சியாக கணக்கில் பணம் வந்து விட்டதா? என பார்த்துக் கொண்டிருந்தனர். ஏ.டி.எம். மையங்களிலும் சென்று பார்த்தனர். பணம் கிடைக்கவில்லை என்றதும் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தங்கள் பகுதியில் யாருக்கெல்லாம் கிடைத்திருக்கிறது, யாருக்கு கிடைக்கவில்லை என தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தனர். தங்களுக்கு கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? யாரை அணுக வேண்டும் என விசாரித்தபடி இருந்தனர்.
அப்போது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அது தொடர்பான குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும், அதில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் கூறப்பட்டிருக்கும் என்றும், அதனை சரி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதற்காக பல்வேறு இடங்களில் உதவி மையங்களும் தொடங்கப்பட்டன. ஆனால் விண்ணப்பத்தின் நிலை குறித்து பலருக்கும் குறுஞ்செய்தி கிடைக்க வில்லை. இதனால் அவர்கள் குழப்பமடைந்தனர். அதனால் உதவி மையங்களை நாட தொடங்கினர்.
இதற்கிடையே வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் பணம் கணக்கில் இருக்க வேண்டிய தொகைக்காக பிடித்தம் செய்து கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து வங்கி கணக்கில் செலுத்தப்படும் உரிமைத் தொகையை பிடித்தம் செய்யக் கூடாது என தமிழக அரசு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.
மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்வதற்காகவும், விவரங்களை தெரிந்து கொள்வதற்காகவும் பிரத்யேக இணைய தளத்தை தமிழக அரசு அறிமுகப் படுத்தியது. ஆனால் உரிமை தொகை கிடைக்காதவர்கள் இணையதளத்தை ஆக்கிரமித்தனர். லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் இணைய பக்கத்தை பார்க்க முயற்சித்ததால் விண்ணப்பத்தின் நிலையை அறியும் இணையபக்கம் முடங்கியது. இதையடுத்து விரைவில் சீரமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக இணைய பக்கமும் முடங்கிய நிலையிலேயே இருந்தது.
மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள், ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களும் மீண்டும் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து தாசில்தார் அலுவலகங்களில் பெண்கள் குவிந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக சத்தமே இல்லாமல் பல பெண்களுக்கு தபால் துறை மூலம் மணி ஆர்டரில் வீடு தேடி சென்று போஸ்ட்மேன்கள் மகளிர் உரிமை தொகையை கொடுத்து வருகின்றனர்.
இதனால் மகளிர் உரிமை தொகை கிடைக்காத ஏமாற்றத்தில் இருந்த பெண்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவலை உடனடியாக பலருக்கும் பகிர்ந்து தபால்காரரிடம் கேட்கும் படி கூறினர்.
மகளிர் உரிமை தொகைக்காக கொடுத்த வங்கி, ஆதார் விவரங்களில் தவறு இருந்தால் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த முடியாது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக தமிழக அரசு மணி ஆர்டரில் மகளிர் உரிமை தொகை கிடைக்கச் செய்துள்ளது.
விண்ணப்பத்தில் விவரங்களை சரியாக கொடுக்காதவர்களுக்கு காரணம் காட்டி நிறுத்தி வைக்காமல் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பி வைத்த தமிழக அரசின் நடவடிக்கையை பெண்கள் பாராட்டுகின்றனர்.