search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து 5 மாணவிகள் படுகாயம்
    X

    விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து 5 மாணவிகள் படுகாயம்

    • காயமடைந்த அனைவரும் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • விடுதிக்காக நியமிக்கப்பட்டுள்ள வார்டன் இங்கு வருவதே கிடையாது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பழனி மற்றும் கொடைக்கானல் மலை கிராமங்களைச் சேர்ந்த 24 மாணவிகள் தங்கி இங்குள்ள அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். கடந்த 2007-ம் ஆண்டு கட்டப்பட்ட விடுதி பல்வேறு இடங்களில் சிதிலமடைந்து ஆங்காங்கே விரிசலுடன் காணப்பட்டது.

    இன்று காலை பள்ளி சமையலர் அபிராமி குழந்தைகளுக்காக உணவு தயாரித்து விட்டு மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென விடுதியின் மேற்கூரை இடிந்து மாணவிகள் மீது விழுந்தது.

    இதில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த மாணவிகள் நளினி, தர்ஷினி, ரெங்கநாயகி, தேவி மற்றும் சமையலர் அபிராமி உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

    சத்தம் கேட்டு அருகில் வாரச்சந்தையில் கூடி இருந்த வியாபாரிகள் உள்ளே வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவிகளை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த அனைவரும் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டாட்சியர் சரவணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அவர் விடுதியில் இருந்த மற்ற மாணவிகளை பாதுகாப்பு கருதி வேறு ஒரு கட்டிடத்துக்கு அனுப்பி வைத்தார். பகல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் உடனடியாக மாணவிகள் மீட்கப்பட்டு விட்டனர். இரவு நேரமாக இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.

    மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இந்த விடுதிக்காக நியமிக்கப்பட்டுள்ள வார்டன் இங்கு வருவதே கிடையாது. பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால்தான் அதிகாரிகளும் வருகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் இது போன்ற அரசு விடுதியில் தங்கி இருந்துதான் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அவர்களின் நலன் கருதி இந்த கட்டிடத்தை பூட்டி விட்டு மாணவிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றனர்.

    Next Story
    ×