search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜாபர் சாதிக்குடன் தொடர்பு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயார்- இயக்குனர் அமீர்
    X

    ஜாபர் சாதிக்குடன் தொடர்பு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயார்- இயக்குனர் அமீர்

    • என்னை மட்டுமே மையமாக வைத்து விசாரணை நடத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.
    • ஓடி, ஒளிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

    மதுரை:

    திரைப்பட இயக்குனர் அமீரை ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக டெல்லி என்.சி.பி. போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இரண்டாவது முறையாக ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரைப்பட இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு நோற்று முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். என்.சி.பி. அதிகாரிகள் என்னை இரண்டாவது முறையாக ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பி இருக்கிறார்கள்.

    என்னை பொறுத்தவரை இது ஒரு புது அனுபவம்தான். என்னோடு பயணித்த நபர் ஒருவர் மீது இவ்வளவு பெரிய குற்றப்பின்னணி இருக்கும்போது, அந்த குற்றத்திற்கான சந்தேக நிழல் என்மீது விழுவதில் தவறில்லை. இதில் என்மீது சந்தேகமே படக்கூடாது என்று நான் கூறமுடியாது. அவர் மீது குற்றப்பின்னணி இருப்பதால் அவருடன் பயணித்தவர் என்ற முறையில் என்னிடம் கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கிறது.

    ஆனால் அதே நேரத்தில் என்னை மட்டுமே மையமாக வைத்து விசாரணை நடத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. வழக்கு குறித்தும், விசாரணை குறித்தும் எந்தவித முழுமையான தகவலை அறியாதவர்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு கருத்து சொல்வதற்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வரும்.

    என்.சி.பி.யின் இரண்டாம் கட்ட விசாரணைக்கோ, என்னிடம் உள்ள சொத்து ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவோ நான் எந்தவொரு கால அவகாசமும் கேட்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக முதன்முறையாக என்னுடைய அறிக்கையில், என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள கால அவகாசம் வேண்டும். ஆரம்பம் முதல் குற்றம் சாற்றப்பட்ட நபர் ஜாபர் சாதிக்கை தற்போது வரை யாரும் பார்க்கவில்லை. அவர் சிறைக்கு சென்று விட்டார்.

    எனவே அவரைப்பற்றியோ, அவர் தொடர்பான வழக்கு பற்றியோ எதுவும் தற்போது கூறமுடியாது. அவரோடு பயணித்தவன் என்ற முறையில் என்மீது சந்தேக நிழல் விழுவதை நான் தட்டிக்கழிக்க முடியாது. இந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். விசாரணை முடிந்ததும் முழுமையாக என்னுடைய பங்களிப்பு என்ன என்பதை தெளிவாக கூறுவேன். எனவே ஓடி, ஒளிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதற்கான தேவையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பேசுவது, எழுதுவது ஆகியவற்றை நான் கடந்து தான் செல்ல வேண்டும், சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது. என்தரப்பில் இருந்து இந்த வழக்கில் நல்ல முடிவு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×