search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரையில் டாக்டர் சரவணன்-பா.ஜனதா நிர்வாகி பேசுவதாக மேலும் ஒரு ஆடியோ வெளியானதால் பரபரப்பு
    X

    மதுரையில் டாக்டர் சரவணன்-பா.ஜனதா நிர்வாகி பேசுவதாக மேலும் ஒரு ஆடியோ வெளியானதால் பரபரப்பு

    • கட்சிக்கு வாருங்கள், மாவட்ட பொருளாளர் பதவி போட்டு தருகிறேன் என்று அழைக்கிறார்கள்.
    • நான் அவர்களிடம் தலைவர் பதவி கேட்டேன். அப்போது அவர் ‘என் பதவியை கேட்கிறாயே?’ என்று சொல்கிறார்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் பேசியதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மதுரை மாநகர பா.ஜனதா முன்னாள் தலைவர் டாக்டர் சரவணனும், இன்றைய மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேலுவும் பேசியதாக இன்னொரு ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் இடம்பெற்று உள்ள பேச்சு விவரம் வருமாறு:-

    ஜெயவேல்; வணக்கம் டாக்டர். செத்த வீடு மாதிரி ஆகிவிட்டது.

    சரவணன்; ஆமாம், ஆமாம்.

    ஜெயவேல்; செத்த வீடு மாதிரி இருக்கிறது. சினிமாவில் பிணங்கள் எழுந்து ஆடுமே? அதே மாதிரி புதிது புதிதாக நிறைய பேர் முளைத்து வருகிறார்கள்.

    ஜெயவேல்; நீங்கள் இருக்கும் வரை கட்சியை மகுடத்தில் வைத்து இருந்தீர்கள். ஆனால் இன்றைக்கு நிறைய பேர் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

    சரவணன்; இனிமேல் அப்படித்தான் இருக்கும் அண்ணே.

    ஜெயவேல்; அந்தக் கட்சிக்காரர் இப்போது தான் பேசினார். நீங்கள் இங்கு வந்து விடுங்கள். உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.

    ஜெயவேல்; பாரதிய ஜனதாவில் சுசீந்திரனுக்கு பொறுப்பு போட்டு கொடுத்து உள்ளார்கள். அவர் மீது நிறைய புகார்கள் உள்ளதே?

    சரவணன்; ஆமாம். அவர் ஒரு பந்தா பார்ட்டி. பேராசிரியராக இருப்பதால் சமாளித்துக் கொள்வார்.

    ஜெயவேல்; கட்சிக்கு வாருங்கள், மாவட்ட பொருளாளர் பதவி போட்டு தருகிறேன் என்று அழைக்கிறார்கள். நான் அவர்களிடம் தலைவர் பதவி கேட்டேன். அப்போது அவர் 'என் பதவியை கேட்கிறாயே?' என்று சொல்கிறார். கூடிய விரைவில் நல்ல செய்தி வரும். அதன் பிறகு உங்களிடம் மீண்டும் போன் செய்து பேசுகிறேன்.

    சரவணன்; சரிங்க அண்ணே.

    இவ்வாறு அந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது.

    டாக்டர் சரவணனும் ஜெயவேலுவும் பேசுவதாக வெளியான ஆடியோ, மாவட்ட அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட பா.ஜனதா துணைத் தலைவர் ஜெயவேல் சக நிர்வாகிகளுடன் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது கமிஷனர் செந்தில்குமாரிடம் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது;-

    "நான் மதுரை மாநகர பா.ஜனதா கட்சியின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் டாக்டர் சரவணனை மாநில தலைவர் அண்ணாமலை பதவி நீக்கம் செய்து உள்ளார்.

    இந்த நிலையில் டாக்டர் சரவணன் தொலைபேசியில் உரையாடியது போலவும், நான் வேறு கட்சிக்கு செல்வதாகவும் போலி ஆடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

    டாக்டர் சரவணனுக்கு சினிமாவில் பின்புலம் உண்டு. எனவே அவர் மேற்கண்ட தொடர்பை பயன்படுத்தி, மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்கள் மூலம் டப்பிங் பேச வைத்து, போலி ஆடியோக்களை தயார் செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டு வருகிறார். இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது.

    எனவே பொய்யான ஆடியோவை சமூகவலைத்தளங்களில் பரப்பிவரும் டாக்டர் சரவணன் மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×